உதைப்பூர்:

குஜராத் மாநிலம் சோட்டா உதைப்பூர் மாவட்டம் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு அரசு ஆரம்ப பள்ளியில் 1ம் வகுப்பு சேரும் மாணவ மாணவிகளை ஊக்கவிக்கும் வகையில் கல்வி துறை சார்பில் 12 ஆயிரம் பள்ளி பைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த பைகளில் உ.பி. மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் படம் அச்சடிக்கட்டுள்ளது. வாசெடி கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் பைகளில் ‘‘ஜில்லா பஞ்சாயத் சாலா பிரவேசோத்சவ்’’ என்ற வாசகங்களுடன் அகிலேஷ் யாதவ் படம் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சூரத்தில் உள்ள ஒரு பை தயாரிப்பு நிறுவனத்திற்கு இ.டெண்டர் மூலம் இந்த பை தயாரிக்கும் ஆர்டர் வழங்கப்பட்டது என்று மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர் மகேஷ் பிரஜபதி தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்த மாநில கல்வி துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதசமா உத்தரவிட்டுள்ளார். விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்த போது அங்கு விநியோகம் செய்வதற்காக இந்த பைகள்
தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. எனினும இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எ டுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் தோஷி கூறுகையில், ‘‘பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்காமல் முந்தைய உ.பி. அரசின் திட்டத்தை சாலா பிரவேசோத்சவ் என்ற பெயரில் குஜராத் அரசு மறு சுழற்சி செய்து நாடகமாடுகிறது.

இதன் மூலம் மாநில அரசு கல்வியில் எவ்வாறு அக்கறை கொண்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது’’ என்றார்.