டில்லி

ன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம் என எய்ம்ஸ் இயக்குநர் எச்சரித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.  இந்த பாதிப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடுமையாக இருந்து உச்சத்தை எட்டியது.  கடந்த சில நாட்களாகப் பாதிப்பு குறைந்து அப்போது தினசரி 4 லட்சத்தை எட்டிய பாதிப்பு தற்போது 60 ஆயிரம் ஆகி உள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இந்தியாவை விரைவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தாக்கக் கூடும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.  இதையொட்டி மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர், “இரண்டாம் அலை கொரோனாவின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால், நாட்டில் பெரும் பாலான மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வுகள் வழங்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்க அதி கரிக்க, மக்கள் மத்தியில் வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பல மடங்கு குறைகிறது.

மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடை வெளியைப் பின்பற்றுதல் போன்ற வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டு வருகின்றனர். இதை நோக்கும் போது, பெருந்தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலையில் இருந்து நாம் பாடம் ஏதும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.  எனவே மிகக்குறுகிய காலத்தில் கரோனா மூன்றாம் அலையை நாம் எதிர்பார்க்கலாம்.

அடுத்த 6 முதல் 8 வாரங்களில் வைரஸின் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கக் கூடும்.  நாம் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், வைரஸ் தடுப்பு விதிமுறைகளைக் கடுமையாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் மூன்றாம் அலையை சிறிது தாமதப்படுத்தலாமே தவிரத் தவிர்க்க முடியாது. நாம் மூன்றாம் அலையை எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.  கொரோனா தடுப்பு விதிமுறைகளை மட்டும் பின்பற்றுவதில் எந்த பயனும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

மேலும், வைரஸ் உருமாற்றம் அடைவதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.  , பிரிட்டனில் இருந்து வந்த புதிய வகை உருமாற்ற வைரஸால் தான், இந்தியாவில் கொரோனா இரண்டாம்  அலை தீவிரமடைந்தது.  எனவே, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளைக் கடுமையான வைரஸ் சோதனைக்கு உட்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கும்போது, எந்தெந்த பகுதிகளில் தினசரி பாதிப்பு அதிகமாகப் பதிவாகிறதோ அங்கெல்லாம் சிறிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியம்.  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே, வைரஸ் தாக்குதலுக்கு எளிதில் ஆளாவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  கொரோனா முதல் அலையில், வைரஸ் பரவலின் வேகம் குறைவாக இருந்தது.   இரண்டாம் அலையில் வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்ததுடன் அதன் வீரியமும் அதிகமாக இருந்தது.

ஆகவே, மூன்றாம் அலையின்போது வைரஸ் பரவலும் அதன் வீரியமும் இன்னும் அதிகமாகவே இருக்கும்.  கொரோனா வைரஸ் பரவுவது அதிகரிக்கும் போது மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும். ஆகவே அனைத்து பிரச்சினைகளையும் முன்கூட்டியே கணித்து, மூன்றாம் அலையைச் சமாளிக்க நாம் வியூகம் அமைப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.