டில்லி:

வெளிநாட்டு மணல் இறக்குமதி குறித்து வரும் 16ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்தபோது, தனியார் நிறுவனம், மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்தது.

இந்த மணலை விற்பனை செய்வோ, வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லவோ தமிழக அரசு தடை விதித்து. இதன் காரணமாக சுமார் 55 ஆயிரம் டன் அளவிலான மணல் துறைமுகப் பகுதியில் தேக்கமடைந்து உள்ளது.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட  மணலில் 85% சிலிக்கான் கலந்திருப்பதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மணலில் சிலிக்கன் அதிக அளவு கலந்திருப்பதால், அதை  கட்டுமானத்துக்கு பயன்படுத்த முடியாது என்றும் கூறியது.

அதைத்தொடர்ந்து மணலை அரசே வாங்கி விற்பனை செய்ய நீதிபதிகள் கோரினர். ஆனால்,  கட்டுமானத்திற்கு உதவாத இறக்குமதி மணலை வாங்கி நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியது தமிழக அரசு.

இதையடுத்து, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  மணல்  கட்டுமானத்திற்கு உகந்ததா என ஆய்வு செய்து வரும் 16ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.