திருச்சி,

நான் டிடிவி தரப்பின் ஸ்லீப்பர் செல் இல்லை என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு என்று பதபதைப்புடன் கூறினார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதல் காரணமாக டிடிவி ஆதரவாளர்கள் 18 பேரை, அதிமுகவின் கொறடா பரிந்துரையின்பேரில் சபாநாயகர் அதிரடியாக தகுதிநீக்கம் செய்து உத்தர விட்டிருந்தார்.

இந்நிலையில் துரோகி  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை அகற்றப்போவதாக அவ்வப்போது கூறி வரும் டிடிவி தினகரன், தனது ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் டிடிவி அரசில் இருப்பதாகவும், நேரம் வரும்போது அவர்கள் செயல்படுவார்கள் என்றும், அரசு பெரும்பான்மை நிரூபித்தால் கவிழும் என்றும்  பலமுறை கூறி வந்திருக்கிறார்.

மேலும் தற்போது பரோலில் வந்துள்ள சசிகலாவை சில அமைச்சர்கள் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

இதற்கிடையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,  அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு சசிகலா தான் காரணம் என அவரை புகழ்ந்து பேசினார்.

அவரது பேச்சின் காரணமாக, அவர்தான் டிடிவியின் ஸ்லீப்பர் செல் என முதல்வர் உள்பட மற்ற அமைச்சர்களும், கட்சியினரும் ஊர்ஜிதாம் செய்தனர்.

அதற்கேற்றார்போல டிடிவி தினகரனும் மறைமுகமாக தற்போது ஒரு சிலிப்பர் செல் வெளியே வந்திருக்கிறார் மேலும் பலர் வருவார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் அமைச்சர் செல்லூர் ராஜு குறித்து கடுமையான விமர்சனங்கள்  விவாதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பழனிச்சாமியும் குட்டிக்கதை ஒன்றி கூறி பேசினார். அது செல்லூர் ராஜு குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லூர் ராஜு,  ‘நான் ஸ்லீப்பர் செல் இல்லை’ என்று அழாத குறையாக பதைபதைப்புடன் கூறினார்.  மேலும், சசிகலா குறித்து நான் கூறிய கருத்தை பெரிதுபடுத்தி உள்ளார்கள் என்று கூறினார்.

தான்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியிலேயே தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் கூறினார்.