2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், நாட்டில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். இதற்கான உதாரணங்களை நாம் தினம் தினம் பார்த்து வருகிறோம்.

இந்திய ஜனநாயகத்திற்காக நான் போராடி வருகிறேன், சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன். என்னைப் பற்றி இவர்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை.

பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அப்போது, அதானி பற்றி நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதை அவரது கண்களில் பார்த்தேன்.

“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல… நான் காந்தி… ராகுல் காந்தி” என்று ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.