2023-ம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் சித்தராமையா எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து நீண்ட நாட்களாக விவாதங்களும், ஊகங்களும் நிலவி வந்தன.

இந்த நிலையில், வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2013 ஆகிய சட்டமன்ற தேர்தலில் வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சித்தராமைய்யா 2018 ம் ஆண்டு வருணா தொகுதியை தனது மகன் யதின்திரா-வுக்கு விட்டுக்கொடுத்து பாதாமி தொகுதியில் போட்டியிட்டார்,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் 2008, 2013 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட சிவக்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக இங்கு போட்டியிடுகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு விவகார பொறுப்பாளராக இருக்கும் தினேஷ் குண்டுராவ் பெங்களூரின் மைய்ய வணிகப் பகுதியான காந்தி நகரில் போட்டியிடுகிறார் 2018 ம் ஆண்டில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர, கர்நாடகாவின் முக்கிய தலைவர்களான கே.எச். முனியப்பா உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதியில் 124 பேர் அடங்கிய முதல் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளது.