புதுடெல்லி:
நான் இந்திராகாந்தியின் பேத்தி என்றும், சில எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல அறிவிக்கப்படாத பாஜக செய்தித் தொடர்பாளர் அல்ல என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு இல்லாத மேலும் இரண்டு சிறுமிகளும் கர்ப்பமாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவர்கள் 7 பேரும் காப்பகத்துக்கு வரும் போதே கர்ப்பமாக இருந்ததாக கான்பூர் மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.

இந்த விசாரணையில் உண்மைகள் மறைக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். தவறான கருத்து வெளியிட்டது தொடர்பாக பிரியங்கா காந்தி பதிலளிக்க வேண்டும் என அம்மாநில சிறுவர்கள் உரிமைகள் அமைப்பு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் உண்மையை பேசுவதற்காக உத்தரபிரதேச அரசு பல்வேறு துறைகள் மூலம் தன்னை அச்சுருத்துவதாக பிரியங்கா காந்தி புகார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனது பணி மக்களை நோக்கியே இருக்க வேண்டும்.

உண்மைகளை அவர்களுக்கு முன்பாக வைக்க வேண்டியது எனது கடமை. பல்வேறு துறைகள் மூலம் என்னை அச்சுறுத்த முயற்சித்து உ.பி அரசு நேரத்தை வீணடிக்கிறது. அவர்கள் எனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தாலும், உண்மைகளை வெளியே சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். நான் இந்திராகாந்தியின் பேத்தி. அறிவிக்கப்படாத பாஜக செய்திதொடர்பாளர்கள் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி தலைவர்கள் போல நான் கிடையாது’ என தெரிவித்துள்ளார்.