சட்டவிரோத மணல் கொள்ளை: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

Must read

சென்னை:

மிழகத்தில்  சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது குறித்து சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுக்கு  சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்து வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்,  திண்டுக்கல் மாவட்ட மண் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படு வதால் மனிதர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வருகிறது.

சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகளிடம் மனுதாரர் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு எந்திரம் துணைபோயுள்ளதாக குற்றம் சாட்டினார்.

சட்டவிரோத மணல் கொள்ளையர்கள் மீது மட்டுமல்லாமல், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள்,

தமிழகத்தில் மாவட்ட வாரியாக மணல், சவுடு மண், ப்ளூமெட்டல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட இடங்கள் எத்தனை?

தடை செய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக குவாரிகள் நடைபெற்று வரும் பகுதிகள் எத்தனை?

நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது தொடர்பாக எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்?

அவர்கள் என்னென்ன பொறுப்புகளில் உள்ளனர்?

மணல் கொள்ளை தொடர்பாக என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது?

சட்டவிரோத மணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு?

என்பது தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

More articles

Latest article