தமிழகஅரசு அமைத்துள்ள ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட நாட்டுப்புற கலைபிரச்சாரக் குழுவின் ‘டாஸ்மாக் விழிப்புணர்வு’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள நாட்டுப்புற குழுவினர், டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கி, அதை பிரசார வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
டாஸ்மாக் தண்ணி போட்டுக்கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்போகும் இவர்களிடம் கல்வி கற்கும் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால்… மனசு பகீர் என அதிர்ச்சியடைகிறது.
இந்த விவகாரத்தில் தமிழகஅரசு விரைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஏற்கனவே பாலியல் புகார்களால் சீரழிந்துவரும் தமிழ்நாட்டின் கல்விச்சாலைகள், மேலும் சீரழிந்து விடும் என்பதை மறுக்க முடியாது.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் படிப்படியாக செப்டம்பர் முதல் செயல்படத் தொடங்கியிருக்கிறன. 2021 நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலுமான பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா காலத்தில் முறையான பள்ளிப்படிப்பைப் பெற முடியாத எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கல்வி இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான ஆறு மாதகாலத் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி, இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் பொருட்டு, ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்தபிறகு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம்வரை மாணவர்களின் கற்றல்திறனை மேம்படுத்த ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென 200 கோடி ரூபாயை மாநில அரசே ஒதுக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் மூலம், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாலை 5 முதல் ஏழு மணி வரை குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்துக்கு, பள்ளி செல்லாத காலத்தில் விடுபட்ட பாடங்களை நடத்துவது, தற்போது பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கான இடைவெளியை நிரப்புவது என்பதை நோக்கமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
இத்திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. ஒன்றிய அளவில் இரண்டு ஆசிரியர்கள் மேற்பார்வையிடுவது, கல்வித்துறை அதிகாரிகள் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும், சோதிக்கவும் பொறுப்பேற்பது என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வாரந்தோறும் குறைந்தது ஆறு மணிநேரம் கற்பித்தல் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, சான்றிதழ் மற்றும் விருதுகள் கொடுக்கவிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி திட்டமானது திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட முடிவுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சியில் தன்னார்வலர்களுக்கு அதற்கான பயிற்சி வகுப்புகள் நவ.2-ம் தேதி நடத்தப்பட்டன.
இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரசாரக்குழுவினர் வாகனம் மூலம் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி, கிராமப்புறம் உள்ப மக்கள் கூடும் பல பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இந்த குழுவினர் சாலையோரம் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இறந்கி அங்கு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு வாகனத்தில் ஏறிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கான மேல்சட்டை அணிந்தவாறு அரசு மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிக்கொண்டு, இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் காட்சி அங்குள்ள சமூக ஆர்வலர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பரபரப்பானது. இதை காணும் பலர் கொதித்தெழுந்துள்ளனர். கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதற்கான விழிப்புணர்வு பிரசாரம் குழுக்கள் மீதும் புகார்கள் எழுந்துள்ளன.
டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கும் கலாச்சார குழுவினர் / வீடியோ
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வழக்குகள், குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கொடுத்து வரும் பாலியல் தொல்லை தொடர்பான தற்கொலைகள், வழக்குகள், புகார்கள் என அதிகரித்து வரும் நிலையில், பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தச்செல்லும் நாட்டுப்புற கலைக்குழுவினர் தண்ணி போட்டுககொண்டு செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தண்ணி போட்டுக்கொண்டு கலைநிகழ்ச்சி நடத்தும், இவர்களால் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ காரைப் பயன்படுத்தி திருச்சி அருகே உள்ள தொட்டியம் பகுதியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கியதால், ஒட்டுமொத்த குழுவின் சேவையையும் துண்டித்து விட்டதாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்து உள்ளார்.