நாக்பூர்: நாட்டின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து மக்களை திசைத் திருப்புகிறார்கள் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் சில ஊடகங்களின் கூட்டணி என்று சாடியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேலை எங்கே? என்று கேட்டால், நிலவைப் பாருங்கள் என்கின்றனர் என்றார்.

மராட்டியம் மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியுள்ளன. கட்சிகளின் தலைவர்கள் ரவுண்டு கட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மராட்டிய மாநிலம் ஜலகோனில் பேசிய மோடி, “தாங்கள் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இருக்கிறதா? என்று சவால் விடுத்தார்.

மராட்டிய மாநிலத்தின் லந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “வேலைவாய்ப்பு என்ன ஆனது என்று கேட்டால், மோடியின் அரசோ நிலவைப் பாருங்கள் என்கிறது. நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மோடியின் கூட்டணி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது.

சீன சந்திப்பு மாபெரும் வெற்றி என்று கூறுவோர், சீன அதிபரிடம் டோக்லாம் ஊடுருவல் குறித்து ஏதேனும் பேசினார்களா?” என்று கேள்வியெழுப்பினார்.