வாடிகன்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் த்ரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கி கவுரவித்தார் போப் ஃபிரான்சிஸ்.

இதன்மூலம் கேரளாவின் பழம்பெருமை வாய்ந்த சிரியோ – மலபார் தேவாலயத்தில் புனிதர் அந்தஸ்து பெறும் நான்காவது நபரானார் மரியம் த்ரேசியா.

இவருடன் சேர்ந்து, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த இதர 4 கன்னியாஸ்திரிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விழாவில், இந்திய அரசு சார்பாக, வெளியுறவுத்துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளிதரன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.

இவர், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் கடந்த 1876ம் ஆண்டு பிறந்தவர். இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், கடந்த 1914ம் ஆண்டு கன்னியாஸ்திரியாக தனது வாழ்வைத் துவங்கினார்.

மதம் மட்டுமின்றி, சமூக சேவைப் பணிகளிலும் ஈடுபட்டார். 2 பள்ளிகள், 3 கான்வென்ட்டுகள் மற்றும் 1 ஆதரவற்ற இல்லம் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.
இவர் கடந்த 1926ம் ஆண்டு தனது 50வது வயதில் உயிரிழந்தார்.

இவருக்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த அல்போன்ஸா, ஃபாதர் குரியகோஸ் என்ற சாவரா அச்சன், கன்னியாஸ்திரி எபுராசியா என்ற எபுராசியம்மா ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.