காந்திநகர்

குஜராத் பள்ளித் தேர்வில் மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் எனக் கேட்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சுபலம் ஷாலா விகாஸ் சங்குல் என்னும் அமைப்பு நடத்தும் பள்ளிகளில் உள் மதிப்பீட்டு தேர்வு நடந்தது.   இந்த அமைப்பு காந்தி நகரில் அரசு மானியம் பெறும் பள்ளிகளையும் நடத்தி வருகிறது.   இந்த உள்மதிப்பீட்டுத் தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக் கேள்வித் தாள்களில் உள்ள இரு கேள்விகள் சர்ச்சையை எழுப்பி உள்ளன.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் “மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டார்?” எனக் கேட்கப்பட்டுள்ளது.    அடுத்ததாக 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் “உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவதையும், சட்ட விரோத மது உற்பத்தியாளர்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்து மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு ஒரு புகார் கடிதம் எழுதுக” எனக் கேட்கப்பட்டிருந்தது.

இதனால் குஜராத் மாநிலத்தில் மட்டுமின்றி நாடெங்கும் கடும் அதிர்வலைகள் கிளம்பி உள்ளன.  இது குறித்து காந்திநகர் கல்வி அதிகாரி பாரத் வாதர், “கடந்த சனிக்கிழமை, மானிய சுயநிதி பள்ளிகளில் நடைபெற்ற உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாளில் மிகவும் மோசமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறான கேள்விகள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவை ஆகும்,  இத்தகைய  கேள்வித்தாள் அமைக்கப்பட்டது குறித்து நாங்கள் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.  அந்த விசாரணை அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வினாத்தாள்கள் சுபலம் லாஷா விகாஸ் சங்குல் பள்ளிகளின் நிர்வாகத்தால்,   மற்றபடி மாநில கல்வித் துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.