சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்ல என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே வெறித்தனமாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நடைபெற் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில அறிவிப்புகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதோவது, காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொள்ளையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டியதுடன், நமது நாட்டின் ‘தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய’ காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், “பழங்குடியின குடும்பங்களில் இருக்கும் வெள்ளி கணக்கிடப்படும். சகோதரிகளுக்கு சொந்தமான தங்கம், சொத்துக்கள் ஆகியவை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் உங்களுக்குச் சம்மதமா? நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே அவர்களது ஆட்சியில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறப்பட்டதாக தெரிவித்தவர், அதிக குழந்தை பெற்றவர்களுக்கு, நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா?” என்றவர், “தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
சகோதர, சகோதரிகளே, இந்த ‘அர்பன் நக்சல்’ எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்,” என்றார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி ‘நாட்டில் வெறுப்பு விதைகளை விதைத்து வருவதாகக்’ கூறியுள்ளது. மேலும் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணி தோல்வியடையப் போவது உறுதி என்பதை தெரிந்ததே என்றும் தெரிவித்துள்ளார்.