சென்னை:
மிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் அதிமுக, திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது. பா.ம.க. 110 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்” என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது:
“நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் சரியாக முறையில் செயல்படவில்லை. 234 சட்டசபை தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா நடந்தது.
பணம் செலவு செய்யாமல் அதிமுகவோ, திமுகவோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது, பாமக சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை.
இந்த தேர்தல் பணப் பட்டுவாடா இல்லாமல் நேர்மையான முறையில் நடைபெற்றிருந்தால், சுமார் 110 தொகுதிகளில் பாமக வெற்றிபெற்று இருக்கும். அரவக்குறிச்சில் 5 ஆயிரம் கொடுத்தார்கள், 10 ஆயிரம் கொடுத்தார்கள் என தேர்தல் ஆணையமே தெரிவித்தது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் தவறு செய்துவிட்டனர். எனவே அரவக்குறிச்சியில் அதே வேட்பாளர்ளை வைத்து தேர்தல் நடத்துவது நீதி ஆகாது. கடந்த சில நாட்களாக வாக்காளர்களுக்கு மீண்டும் பணம் பட்டுவாடா நிகழ்ந்துள்ளது. ஆகையால் அந்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிகக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும்” என்று அன்புமணி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “500 டாஸ்மாக் கடைகளை மூடல், டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளதை பாமக வரவேற்கிறது. ஆனால், தமிழக அரசு எப்போது டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.