சென்னை:
ரூர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது,  மூன்று கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் இருந்தது உள்ளிட்ட விவகாரங்களில் உண்மை என்ன என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி இருக்கிறது.
சென்னையில் திமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட மொத்தம் 600 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு முன்பு ஆளுங்கட்சி பிரமுகர்கள் வீட்டில் சோதனைகள் என்றும், பணம் பிடிபட்டது பற்றியும், பணம் பட்டுவாடா செய்யப்பட்டது பற்றியும் அன்றாடம் நாளேடுகளில் செய்திகள் வெளிவந்தன  என்பதை தமிழகமே நன்றாக அறியும். அதிலும் குறிப்பாக கரூர் நகருக்கு அருகில், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் என்பவர் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, அதன் மூலம் பல கோடி ரூபாய் ரொக்கமும், ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும், பணம் எண்ணும் 12 இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட காமராவில் எந்தெந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் அங்கே வந்தார்கள் என்பது பற்றியும் பணப்பரிமாற்றங்கள் பற்றியும் உள்ளடங்கி இருக்கின்றன என்றும், அந்தக் காமரா பதிவுகளை வெளியே விடாமல் கைப்பற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வந்தன.
24-1464079303-dmk-mla-meeting45
அதன் பின்னர் அந்த அன்புநாதனின் நண்பர் மணிமாறன் வீட்டிலும் தொழிற்சாலையிலும் நடைபெற்ற சோதனை பற்றிய செய்திகளும் வெளிவந்தன. இவ்வளவு பெரிய சம்பவத்தில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்ற எதிர்க் கட்சிகளின் வேண்டுகோள்களும் அலட்சியப்படுத்தப் பட்டன.
அதுபோலவே, திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பிடிபட்டது. அதுபற்றி பல ஊடகங்களில் வெளி வந்து, பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவை எதற்கும் பதில் சொல்லாமல், அந்தப் பணம் வங்கிக்குச்சொந்தமானது என்று அதிகார பீடத்திலே உள்ளவர்களால் ஒரு பொய் நாடகம் ஜோடிக்கப்பட்டு, அந்தச் செய்தியும் மறைக்கப்பட்டு விட்டது.
அது பற்றியும் சி.பி.ஐ. விசாரணை கோரி விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் இதுவரை ஏற்கப்படவில்லை.
இவ்வளவு பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே அலட்சியப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், இவைகளில் எல்லா ம் முறைகேடுகளும், நாட்டின் பொருளாதாரத்தையே சவாலுக்கழைக்கும் மிகப் பெரும் தவறுகளும் நடைபெற்றுள்ளன என்பதை மக்கள் எளிதாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டு மக்களுக்கு விளக்கம் தரும் வகையிலாவது, இந்த இரண்டு பிரச்சினைகளிலும் மூடி மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் என்ன என்பதை உலகத்திற்குத் தெரிவிக்கவும், மடியில் கனமில்லை என்பதைக் காட்டவும், உடனடியாக சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு தானே கேட்டுப் பெற்று நடத்திட முன் வர வேண்டுமென்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது. சி.பி.ஐ.விசாரணைக் கோர தமிழக அரசு முன் வராத பட்சத்தில், மத்திய அரசே உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது” – இவ்வாறு தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது.