டில்லி

ரும் மக்களவை தேர்தலில் மோடியின் பாஜக குறைவான இடங்களில் வெற்றி பெற்றால் பங்குச் சந்தை பாதிப்பு அடையும் என பங்குச் சந்தை நிபுணர் சங்கர் சர்மா தெரிவித்துள்ளார்.

பிரபல பங்குச் சந்தை வர்த்தக நிறுவனமான ஃபர்ஸ்ட் குளோபல் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் இணை மேலாண்மை இயக்குனர் சங்கர் சர்மா ஆவார். இவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிகவும் அனுபவம் உள்ளவர் என்பதால் பல நேரங்களில் பங்குச் சந்தை குறித்து இவர் அளிக்கும் முக்கிய கருத்துக்கள் அப்படியே நிகழ்வதுண்டு. இவர் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அப்போது சங்கர் சர்மா, “மக்களவை தேர்தல் என்பது அரசியலுக்கு மட்டுமின்றி பங்கு வர்த்தக சந்தைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும் அதன் தாக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் பிரசாரம் தொடங்கும் போதே பங்குச் சந்தையில் எதிரொலிக்கும். ஆனால் இம்முறை அது போல நடக்கவில்லை. ஆகவே இம்முறை தேர்தல் முடிவுகள் பற்றி முதலீட்டாளார்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள் என தெரிகிறது.

தற்போது பங்குச் சந்தை மிகவும் சரிந்து வருகிறது. இதனால் பல முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். அதுவும் என் பி எஃப் சி பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அது மட்டுமின்றி வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் வர்த்தகம் நடத்தி வந்தாலும் அந்நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருகின்றன.

இந்நிலையில் மோடியின் பாஜக குறைந்த எண்ணிக்கையுடன் வெற்றி பெற்றால் அதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும். பங்குச் சந்தை தற்போது சரிந்து வருவதற்கு மோடி மீண்டும் வெற்றி பெற முடியாது என முதலீட்டாளர்கள் நினைப்பதாக தோன்றுகிறது.

அத்துடன் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதும் சீனாவின் வர்த்தக வீழ்ச்சியும் இந்திய பங்குச் சந்தையை பாதிக்கக்கூடும்” என தெரிவித்துள்ளார்.