டில்லி

தேர்தல் ஆணையர் அசோக் லாவசாவின் அறிக்கையை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தேர்தல் ஆணையம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதிலளித்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் இருந்தன. அப்போது பல அரசியல் தலைவர்கள் பேச்சுக்கள் குறித்த புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டன. அதில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் பேச்சுக்கள் பற்றியும் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.

இந்த புகார்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் அசோக் லாவசா ஆகியோர் அடங்கிய குழு பரிசீலித்தது பரிசீலனைக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் குற்றமற்றவர்கள் என்னும் சான்றிதழை குழு வழங்கியது.

ஆனால் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த அசோக் லாவசா இந்த புகார்களை ஆதரித்து அறிக்கை அளித்ததாக தகவல்கள் தெரிவித்தன.  அத்துடன் அசோக் லாவசாவும் தாம் புகார்களுக்கு ஆதரவாக அளித்த அறிக்கைகளை வெளியிடலாம் என தெரிவித்திருந்தார். இதை ஒட்டி தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அசோக் லாவசா, சுஷில் சந்திரா மற்றும் சுனில் அரோரா அளித்த அறிக்கையை வெளியிடுமாறு கேட்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் அசோக் லாவசா அளித்த அறிக்கைகளை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம், “இந்த அறிக்கைகள் அனைத்தும் தேர்தல் நடைமுறை சம்பந்தப்பட்டது என்பதால் அவற்றை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளிக்க முடியாது.

மேலும் அவ்வாறு இந்த அறிக்கைகளை வெளியிடுவதால் யாருடைய உயிருக்கு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அறிக்கைகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் யாரும் கேட்கக் கூடாது” என பதில் அளித்துள்ளது.

இது குறித்து முன்னாள் தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி, “இந்த பதில் சிரிப்பு மூட்டுகிறது. உயிர் ஆபத்து என மிரட்டுவதை தவிர வேறு எந்த பதிலும் ஆணையத்துக்கு கிடைக்கவில்லையா? பாஜகவினர் யாராவது அசோக் லாவசாவை தாககலாம் என தேர்தல் ஆணையம் எண்ணுவது போல் தெரிகிறது.” என கருத்து தெரிவித்துள்ளர்.