பெங்களூரு:

காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த  குமாரசாமி. இவரது அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியினரும் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், பாஜக கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க, அதிருப்தி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக் களை வலைவீசி தேடி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மதசார்பற்ற அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சைகள் பாஜகவுக்கு தாவிவிட்ட நிலையில், மேலும் பலரை இழுக்க மாநில பாஜக தலைமை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை முன்னாள் முதல்வர் சித்தராமையா கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு ஒருசில எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாததால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில முதர்வர் குமாசாமி,  காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்  என்று கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையாதான் முதல்வர் என்று கூறி வருகின்றனர்  என்றவர், அனைத்தையும் காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்றும்,  காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கும் மதசார்பற்ற ஜனதாளம் இடையே நடை பெற்று வந்த உரசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.