ராய்ப்பூர்

பாஜகவுக்கு உண்மையில் காந்தி மீது மரியாதை இருந்தால் கோட்சேவை புகழ்பவர்களைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவரான திக் விஜய் சிங் கூறி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்தியப்  பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் போபால் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறங்கிய சாத்வி பிரக்யா தாகுர் வெற்றி பெற்றார்.  தேர்தல் பிரசாரத்தில் இருந்தே பிரக்யா தாகுர் தொடர்ந்து மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை  புகழ்ந்து வருவது அடிக்கடி சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

மக்களவையில் சமீபத்தில் பிரக்யா தாகுர் மகாத்மா காந்தியை சுட்டுக  கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் எனக் கூறினார்.  இது அவையில் மட்டுமின்றி நாடெங்கும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இதற்காக சாத்வி பிரக்யா தாகுருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.  அத்துடன் பாஜக எப்போதும் காந்திக்கு மரியாதை செலுத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா தாகுர் தமது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி அனைவரிடமும் மன்னிப்புக் கோரினார்.

இது குறித்து திக் விஜய் சிங் ராய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் , “பாஜக உண்மையாகவே மகாத்மா காந்தி மீது மரியாதை வைத்திருந்தால் அவருடைய கொள்கைகள் மூலம் நடப்பவர்களாக இருந்தால் கோட்சேவை புகழ்பவர்களையும் அவரை தேச பக்தர் எனக் கூறுபவர்களையும் கட்சியை விட்டு விலக்க வேண்டும்.

ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆரம்பத்தில் இருந்து மகாத்மா காந்தியைக் கொன்றதன் மூலம் கோட்சே நன்மை புரிந்துள்ளதாகச் சொல்லி வருகின்றனர்.  அதன் பிறகு அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளதாகச் சொல்லிக் கொள்ளலாம்.  ஆனால் மோடியின் மனதிலும் இதே கருத்து உள்ளது என்பதை வெகு எளிதாகத் தெரிந்துக் கொள்ளலாம்.

தற்போது சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை விடுக்கும் சிவசேனா கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது குறித்தும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். மகாராஷ்டிராவில் சுதந்திரப் போராட்டத்துக்காக போராடியதற்காக நாங்கள் சாவர்கரை மதிக்கிறோம்.  அவருடைய இந்துத்வா கொள்கைகளுக்காக அல்ல” என தெரிவித்துள்ளார்.