குடகு, கர்நாடகா,

ந்துப் பெண்களை யாரேனும் தொட்டால் தொட்ட கைகள் இருக்காது என மத்திய பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே எச்சரித்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே தனது பேச்சுக்களால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த 2017 ஆம் வருடம் பாஜக விரைவில் இந்த அரசை மதச்சார்பற்ற அரசு என்னும் நிலையில் உள்ளதை பாஜக மாற்றி அமைக்கும் என தெரிவித்தார். மேலும் இதற்காக அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என அறிவித்தார்.

இது பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பரபரப்பை உண்டாக்கியது. அதை தொடர்ந்து ஹெக்டே பற்பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு வலுக்கும் போது அவர் மன்னிப்பு கேட்டோ , அல்லது வருத்தம் தெரிவித்தோ அந்த சர்ச்சையை முடிப்பது வழக்கமாகும்.

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் நடந்த ஒரு பேரணியில் கலந்துக் கொண்ட அனந்தகுமார் ஹெக்டே தனது உரையில், “ஒவ்வொரு மக்களும் தான் ஒரு இஸ்லாமியர், கிறித்துவர், லிங்காயத்து, பிராமணர், இந்து என்பதில் அவசியம் பெருமை கொள்ள வேண்டும். தங்களுடைய பெற்றோர்களை பற்றி அறியாதவர்கள் மட்டுமே தங்களை மத சார்பற்றவர் என கூறிக் கொள்வார்கள்.

தாய் தந்தை யார் என தெரியாத அவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு என எந்த ஒரு சொந்த அடையாளமும் கிடையாது. ஆனால் நாம் அடிப்படையில் யார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு மதத்தவனோ, சாதியை சேர்ந்தவனோ, இந்துப் பெண் ஒருத்தியை  தொட்டால் அவன் கைகள் இருக்காது” என பேசி உள்ளார்.