“‘அக்னிவீரர்’களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் எதற்கு ?” என்று வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூன் 14 ம் தேதி அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நான்காண்டுகள் ஒப்பந்தம் முடிந்ததும் 11.70 லட்ச ரூபாய் சேவா நிதியாக வழங்கப்பட்டு 75 சதவீதம் பேருக்கு ஓய்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த திட்டம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த வருண் காந்தி எம்.பி. “நாட்டுக்காக பணிபுரியும் அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லையென்றால் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் ஓய்வூதியம் எதற்கு ?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லையென்றால் எனது ஓய்வூதியத்தை விட்டுத்தர நான் தயார்.

“அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் தங்கள் ஓய்வூதியத்தை விட்டுத்தர மாட்டார்களா ?” என்றும் கேட்டுள்ளார்.

மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒலித்திருக்கும் வருண் காந்தியின் குரல் பா.ஜ.க.வில் உள்ள அதிர்ப்தியாளர்களின் குரலாகவே பார்க்கப்படுகிறது.