சென்னை: நடப்பாண்டு (2023) உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நாளை  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.  பாதுகாப்பு பணியில்  2ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளதடடன் முதல்முறையாக ட்ரோன்களும்பயன்படுத்தப்படுகிறது.

ஐசிசி 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட்  (50 ஓவர்) போட்டி நடப்பாண்டு  இந்தியாவில் நடைபெறுகிறது. ஏற்கனவே  1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2019 இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான நடைபெறும் மோதலுடன் ஐசிசி உலக கோப்பை 2023 அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 5ந்தேதி தொடங்கியது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது.

போட்டியின் அடுத்த ஆட்டம், நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை நாளை (அக்டோபர்.8) சென்னை சேப்பாக்கம்  எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சந்திக்க உள்ளத. இந்த போட்டி  பிற்பகல் 2 மணியளவில்  தொடங்குகிறது. இப்போட்டியை காணுவதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்ட நிலையில், போட்டியை கான  தமிழக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.  இதைத்தொடர்ந்து, அக்டோபர்.13, 18, 23, 27 ஆகியதேதிகளிலும் அடுத்தடுத்து போட்டிகள் சென்னையில்  நடைபெற உள்ளன. இதில் வெவ்வேறு அணிகள் மோதுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நாளை நடைபெறும் போட்டிக்காக  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன், போக்குவரத்துகளும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கம் வரும் வகையில், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவல்துறை மற்றும் பல்வேறு துறை உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பணிக்காக சென்னையில்  சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், முதன்முறையாக ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணிக்க  போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வானில் பகலிலும்  இரவிலும் படம் பிடிக்கும் வீடியோ பொருத்தப்பட்டுள்ள அதிநவீன  ட்ரோன்களைப் பறக்கவிட்டு, அதன்மூலம் கண்காணித்து நடவடிக்கை  எடுக்கப்பட உள்ளது.

மேலும்,  சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி உள்ள அனைத்து சாலை சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் கையடக்க அதி நவீன 10 கேமராக்கள் மூலம் கிரிக்கெட் போட்டி தொடக்கம் முதல் முடியும்வரை போக்குவரத்து போலீஸார் கண்காணிக்க உள்ளனர். கிரிக்கெட் போட்டியைக் காண வரும்ரசிகர்கள், அவர்களின் வாகனங்களும் வீடியோவாகப் பதிவு செய் யப்பட உள்ளது. இந்த காட்சிகள் அனைத்தையும் போலீஸ் அதிகாரிகள் தங்கள் செல்போனிலேயே பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

காவல் ஆணையர் தலைமையில் கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து காவல்) ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்’’ என்றனர்.

சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  விக்டோரியா ஹாஸ்டல் (கெனால் ரோடு) சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழிபாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை – பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கண்ணகி சிலையில் இருந்து வரும் அரசு பேருந்துகள், பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடைய லாம்.

பாரதி சாலை – ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள்இலக்கை சென்றடையலாம். பாரதிசாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை. இதேபோல் வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதியிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாசாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜாசாலை வரும் அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், உழைப்பாளர் சிலை – காமராஜர் சாலை வழியாகபொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்குச் செல்லலாம்.

போர் நினைவுச் சின்னம் வழியாக வரும் வாகனங்கள், காமராஜர் சாலைவழியாக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்குச் செல்லலாம்.

காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தங்களுக்கு செல்லலாம். அனுமதி உள்ள வாகனங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட் டுள்ளது.