சசிகலா – சசிகலா புஷ்பா

 

மறுமணம் செய்துகொண்டுள்ள அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா,  கணவருடன் சென்று சசிகலாவிடம் ஆசீர்வாதம் வாங்குவேன் என்று அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ராமசாமி என்பவரை மறுமணம் செய்துகொண்டார் அ.தி.மு.க. எம்.பி. சிசகலா புஷ்பா. ராமசாமிக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். இவர்களது திருமணம் சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் இருவரும் சன் நியூஸ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

“என் கணவர் ராமசாமி சிறந்த கல்வியாளர். கலாச்சாரத்தை மதிப்பவர். திருமணத்துக்கு முன் நாங்கள் அவ்வளவாக பேசிக்கொண்டதில்லை. என் அம்மாவும் அதில் உறுதியாக இருந்தார்.

நான் மறுமணம் செய்துகொண்டதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். நான் தைரியமானவள். இப்போதான் எனக்கு நாற்பத்தியோரு வயது ஆகிறது.  இன்னும் நீண்ட வாழ்க்கை இருக்கிறது.  தற்கொலை செய்துகொள்ள நான் கோழை அல்ல. மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக, நேர்மையாக கழிக்க விரும்புகிறேன்.

முன்பு, “அதிமுக தொண்டர்கள் என் பக்கம். தனிக்கட்சி துவங்குவேன்” என்று நான் சொன்னது உண்மைதான்.

ஆனால், டி.டி.வி. தினகரனை தோல்வி அடைய வைக்க ஆளுங்கட்சி முயன்றது. ஆகவே அவர் பக்கம் நிற்கவேண்டும் என்று மடிவு செய்தேன்.

சசிகலாவை முன்பு நான் கடுமையாக விமர்சித்தது  உண்மைதான். அரசியலில் இது சகஜம். ஓபிஎஸ் நல்லவர் என்று நினைத்து ஆதரித்தேன். ஆனால் அவர் பதவிக்காகத்தான் வாழ்கிறார் என்பது புரிந்தது. பிறகு ஈ.பி.எஸ். நல்லவர் என்று நினைத்தோம். அவரும் பதவிக்காக காலில் விழுந்த சசிகலாவுக்கே துரோகம் செய்தார். இவர்களுடன் ஒப்பிடுகையில் சசிகலா மிக நல்லவர். சிறையில் கஷ்டப்படுகிறார்.

அவர் மீதான வழக்குகள் குறித்து பேசக்கூடாது. அது லீகல்.

தினகரன் செயல்பாடு பிடித்திருக்கிறது. அவருக்கு தலைவரான சசிகலா எனக்கும் தலைவர்தான்.

திருமணத்துக்கு அவர்களுக்கு பத்திரிகை வைக்க விரும்பினோம். ஆனால், எங்கள் திருமணத்தை கிண்டல் செய்து, மெண்டல் டார்ச்சர் செய்துவிட்டார்கள் சிலர். ஆகவே பத்திரிகை யாருக்கும் வைக்கவில்லை.

இனி தினகரன் மற்றும் சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவோம்” என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.