இன்று அ.தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டம் கேலிக்கூத்து என்று வைகோ தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளும் அ.தி.மு.க. இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளதாவது:

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளும் அ.தி.மு.க. இன்று நடத்தும் உண்ணாவிரதம் கேலிக்கூத்தாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவே இல்லை. இந்த நிலையில், தீர்ப்பில் அப்படி குறிப்பிட்டுள்ளதாகவும், அதை மீறி மத்திய அரசு செயல்படுவதாகவும் நாடகம் ஆடுகிறது அதிமுக. பாராளுமன்றத்தில் அமளி செய்வதும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதும், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவதும் எல்லாமே நாடகம்தான். மத்திய பாஜக அரசின் கண்ணசைவில் இந்த நாடகங்களை அதிமுக நடத்துகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை. தீர்ப்பை அளித்த நீதிபதி தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளார்.

மத்திய பாஜகவும் அதிமுகவும் தமிழகத்தை பாலைவனமாக்க திட்டமிடுகின்றன” என்று வைகோ தெரிவித்துள்ளார்.