சென்னை: சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர்  கமல்ஹாசன், அவரை நண்பர் என்ற முறையில் நேரில் சந்தித்து பேசுவேன் என்றும்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுகவுக்கு இணையாக கமல்ஹாசனும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே மதுரை பகுதிகளில் 4 நாட்கள் பிரசாரத்தை முடித்தவர், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் கமல்ஹாசன்,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “ரஜினியை சென்னை சென்ற பிறகு சந்திப்பேன். அவர் நலனை விசரிப்பேன். அவர்களின் நலனில் அக்கறை கொள்வதில் நானும் ஒருவன் என்று சிலாகித்தவர், அப்போது, கூட்டணி குறித்து என் நண்பரான ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் என்றார்.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பு,  அவர் உடல்நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு,  அதை நான் வரவேற்கின்றேன் என்றார்.

மேலும்,  பெண் குழந்தைகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவுரை கூறி பெற்றோர்கள் வளர்க்கவேண்டும் என்று அறிவிவுறுத்தியவர்,  அரசியலில் நேர்மையாக இருக்க முடியும் என்பதை எனது கல்லறையைப் பார்த்து அனைவரும் தெரிந்து கொள்வார்கள், சட்டமன்ற தேர்தலின்போது, எனது தலைமையில் கூட்டணி அமைக்கவேண்டும் என்பது மக்கள் நீதி மய்யம் ஆசை.  234 தொகுதிகளிலும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன் என்றார்.

செய்தியாளர்களிடம் திராவிடம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம். அதை இரண்டு பேருக்கு மட்டும் பிரித்து கொடுக்கவில்லை என்று காட்டமாகவும் விமர்சித்தார்.