சென்னை: காங்கிரஸ் எம்.பி.  தீரஜ் பிரசாத் சாஹு வீடு உள்பட நிறுவனங்களில் 5 நாட்கள் நடைபெற்ற  வருமான வரித்துறை சோதனையின்போது ரூ.350 கோடி அளவில் பணம் கட்டுக்கட்டாக கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பணம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில்,  சோதனை நடந்து 10 நாள்கள் ஆன நிலையில், சிக்கிய பணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார்.

கடந்த மாதம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீடுகளிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியது.   5 நாள்கள், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பீரோக்கள் மற்றும் பெட்டிகள் நிரம்ப பணம் பறிமுதல் செய்யப்பட்டது நாட்டை திரும்பி பார்க்க வைத்த இந்த சோதனையில் மொத்தம் 351 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மீட்கப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்திய நோட்டு எண்ணும் இயந்திரம், பழுதடையும் அளவுக்கு பணம் சிக்கியிருக்கிறது.

இந்திய வரலாற்றில் இதுவரை கைப்பற்றிடாத அளவுக்கு பணம் சிக்கியது. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்த பணம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு காங்கிரஸ் கட்சியோ, எம்.பி. தீரஜ் சாஹுவோ முறையான பதில்களை தெரிவிக்கவில்லை. இது மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,. தீரஜ் சாஹு நடத்தி வரும் தொழிலுக்கும் தங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், வருமான வரித்துறை  சோதனை நடந்து 10 நாள்கள் ஆன நிலையில், வருமான வரித்துறை கைப்பற்றிய சுமார் ரூ.351 கோடி ரூபாய் பணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளது.

இந்த  சோதனையில் சிக்கிய பணம் நேரடியாக தனக்கு சொந்தமானது இல்லை என்றும் சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக  டெல்லியைச் சேர்ந்த ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “சுமார் 35 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வரும் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை.  இதற்காக நான் வேதனை அடைகிறேன்.

வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட  பணம் எனது நிறுவனத்துக்கு சொந்தமானது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபான வியாபாரத்தில் உள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் நிறுவனங்களுக்கு சொந்தமானது.  நாங்கள் தொழிலை வெளிப்படையாக செய்து வருகிறோம். சோதனையில் சிக்கிய பணம் மதுபானம் விற்று கிடைத்த பணம். அது எனது குடும்பம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமானது.

நான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். வணிகத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை.  என குடும்பத்தினரே வணிகத்தை நடத்தி வருகின்றனர். எனது குடும்பத்தினரால் எனது தொழில் கவனிக்கப்படுகிறது. தொழில் எப்படி செல்கிறது என அவ்வப்போது விசாரிப்பேனே  தவிர எனக்கு அதில் சம்பந்தம் இல்லை.  மதுபான வியாபாரத்தில் கிடைத்த பணத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தவர்.

இந்த பணம் தொடர்பாக எனது குடும்ப உறுப்பினர்கள் தேவைப்பட்டால் வருமான வரித்துறைக்கு விளக்கம் அளிப்பார்கள். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம்” என்றார்.

பொதுவாக அரசியல்வாதிகள், தங்களது பெயரில் எந்தவொரு நிறுவனத்தையும் வைத்துக்கொள்ளாமல், மனைவி மற்றும் குடும்பத்தினர் அல்லது பினாமிகளைக் கொண்டு, அவர்களது பெயரில் நிறுவனங்களை நடத்தி வருவது வாடிக்கையானது.  ஊழல் செய்து சிக்கிக்கொண்டால், தனக்கும் அதற்கும் சம்பந்தம்ம் இல்லை என்று பல்டி அடிப்பதும் அரசியல்வாதிகளின் கைவந்த கலை. அதைத்தான் தற்போது  காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு செய்துள்ளார்.