டெல்லி: 2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் சதம் அடிக்காமல் போனதற்கு தோனி காரணம் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.


இந்திய கிரிக்கெட் அணியானது கபில்தேவ் தலைமையில் 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு, 2011ம் ஆண்டு தோனி தலைமையில் மீண்டும் சாம்பியன் ஆனது.
அந்த தொடரின் பைனலில் இந்தியா இலங்கையை சந்தித்து. இலங்கையின் ஸ்கோரை இந்தியா சேஸ் செய்ய தொடங்கியிருந்த தருணம். 114/3 என்ற தருணத்தில் கம்பீர், கேப்டன் தோனியுடன் கை கோர்த்தார்.


இருவரும் அருமையாக பார்ட்னர்ஷிப் அமைத்து, 4வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தனர். அந்த ஆட்டத்தில் கம்பீர் 97 ரன்களில் அவுட்டானார். சதம் அடிக்க முடியாமல் அவுட்டாகி வெளியேறினார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து ஏன் அந்த போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தது எப்படி என்றும், அதற்கு தோனியே காரணம் என்றும் கூறியிருக்கிறார்.


அந்த பைனல் ஆட்டம் பற்றி கம்பீர் கூறி இருப்பதாவது: என்னிடம் நிறைய பேர் இன்றும் அடிக்கடி கேட்கும் கேள்வி ஏன் 2011ம் ஆண்டு பைனலில் சதம் அடிக்கும் வாய்ப்ப்பை ஏன் நழுவவிட்டீர்கள் என்பதுதான். அதற்கு தோனி தான் காரணம். நான் அப்போது களத்தில் 97 ரன்களுடன் நின்றிருந்தேன். அப்போது என்னிடம் வந்த தோனி, இன்னும் 3 ரன்கள் சதத்துக்கு பாக்கி இருக்கிறது. அதை எடுக்குமாறு கூறினார்.


அந்த நிமிடம் வரை எனது தனிப்பட்ட ஸ்கோரை பற்றி சிந்திக்காத நான், தோனியின் அந்த பேச்சை கேட்டபின்னர், மனது மாறியது. சதத்தை நோக்கி கவனத்தை செலுத்தினேன். அழுத்தம் அதிகரிக்க, கடைசியில் சதத்தை எட்டாமல் 97 ரன்களில் அவுட்டானேன். எப்போது எனது சாதனைக்காக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்போதே அவுட்டாகிவிட்டேன்.


உடை மாற்றும் அறைக்கு சென்றபோது எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். அந்த 3 ரன்களையும், எனது சதத்தை பற்றியும் சிந்தித்ததால் ஆட்டமிழந்துவிட்டேனே என்று நினைத்தேன். இன்றும் கூட அந்த 3 ரன்களை ஏன் எடுக்கவில்லை என்று பலர் என்று கேள்வி கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்றார்.


2011ம் ஆண்டு உலக கோப்பை வெற்றிக்கு பிறகு, அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தடுமாறினார் கம்பீர். ஒரு கட்டத்தில் அனைத்து வரை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவத்த அவர், தற்போது பாஜக எம்பியாக இருக்கிறார்.