சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பட்டின்சனுக்கு, உள்ளூர் போட்டியில் எதிரணி வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியதால், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; ஜேம்ஸ் பட்டின்சன் சுமார் 2.5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெற்று, ஆஷஸ் தொடரில் விளையாடி, பாகிஸ்தானுக்கு எதிரான வரும் 21ம் தேதி துவங்கவிருந்த டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க தயாராக இருந்தார்.

இந்நிலையில் விக்டோரியா அணி சார்பில், குயின்ஸ்லாந்து அணிக்கு எதிரான உள்ளூர் போட்டி ஒன்றில் பங்கேற்றபோது, எதிரணி வீரர் ஒருவரை தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இவரின் இந்த செயல் குறித்தப் புகார், கள நடுவர்களின் மூலமாக, ‍மேட்ச் ரெஃப்ரியிடம் சென்றது.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதிலிருந்து இவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிக்குவது கடந்த 18 மாதங்களில் இது மூன்றாவது முறையாம். இவருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.