தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருக்கும் போலீஸ் என்னை சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின்  உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற அலுவல் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும், தலைமைச் செயலகத்தில் மறியல் செய்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“மக்களின்உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. காவல்துறையின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும்  கவலைக்கிடமாக உள்ளனர்.

இதனால் கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடி நகரமே கொந்தளிப்பாக இருக்கிறது. அம் மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோரை மாற்றியுள்ளனர். ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை. இதுவரை முதல்வர் தூத்துக்குடி செல்லவில்லை. அங்கு யாருரையும் பார்த்து ஆறுதல் கூட சொல்லவில்லை.

இது அரசு செயலற்று இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. . எத்தனையோ ஆட்சியை பார்த்துள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் அரசு பக்கம் மக்கள் இருந்தார்கள்.  இப்போது துப்பாக்கி சூடு நடத்த பயிற்சி பெற்ற அதிகாரிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இது போல இதற்கு முன்பு நடந்தது இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க வேண்டும்.

தனது பதவியை காப்பாற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  முயற்சி செய்கிறார். அதனால்தான் அவர்கள் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதிமுக போராடுவது எல்லாம் அதற்குத்தான்.

முதல்வர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். டிஜிபி ராஜேந்திரனை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இதை சொல்லிவிட்டுதான் நாங்கள் அலுவல் கூட்டத்தை புறக்கணித்துள்ளோம். என் மீது வழக்கு தொடுத்துள்ளார்கள்.

என்னை என்ன செய்தாலும் தாங்கிக்கொள்வேன். அங்கே குண்டடி பட்டு மக்கள் இறந்துள்ளனர். வழக்கு என்ன அங்கே இருக்கும் காவலர்கள் என்னை வந்து சுட்டுக் கொன்றாலும் தாங்கிக் கொள்வேன்” என்று உருக்கமாக பேட்டியளித்தார்.