இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் அஸ்வின், ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாளராக இடம்பெற்றிருக்கிறார்.

இதுவரை விளையாடிய 78 டெஸ்ட் போட்டிகளில் 409 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஸ்வின், 7 முறை ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 30 முறை ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்துள்ளார், 35 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அணில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக அஸ்வினின் சாதனை உள்ளது.

இன்னும் 9 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தால் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்து இந்திய அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இந்நிலையில், ஈ.எஸ்.பி.என் -கிரிக்இன்போவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், “தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளளில் நடந்த போட்டிகளில் இதுவரை ஒரு இன்னிங்ஸில் கூட 5 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியதில்லை”

“சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் கூட அக்சார் படேல் இவரை விட சிறப்பாக பந்து வீசி இருந்தார்.”

“இந்தியா உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடு களங்களில் மட்டுமே ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ள அஸ்வினின் பந்துவீச்சு மிகச்சிறந்ததாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியிருந்தார்.

சஞ்சய் மஞ்சரேக்கரின் இந்த கருத்துக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சாப்பெல் மற்றும் இந்திய வீரர் அபினவ் முகுந்த் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“மேற்கு இந்திய தீவு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோயல் கார்னர் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அவர் அதிகமாக எந்த ஒரு இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை, ஏனென்றால் அவரது அணியில் இருந்த வேறு மூன்று சிறந்த பந்துவீச்சாளர்களுடன் அவர் போட்டியிட வேண்டியிருந்தது. அதனால் அவர் சிறந்த பந்துவீச்சாளர் இல்லை என்று கூறி விட முடியாது” என்று இயன் சாப்பெல் கூறினார்.

மேலும் இஷாந்த் சர்மா மற்றும் முகமத் ஷமி போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் அணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அபினவ் முகுந்த் “ஆடுகளத்தின் தன்மை, போட்டியின் போக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பாக பந்துவீசக்கூடிய ஒருவர் அஸ்வின்”

“மஞ்ரேக்கரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். போட்டிக்கு ஏற்ப தன்னை சிறப்பாக தயார் படுத்திக்கொள்ள கூடிய வீரர் அஸ்வின், ஆஸ்திரேலியா-வுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தவர் அஸ்வின், மேலும் இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா விளையாட அஸ்வினின் பங்கும் உள்ளது” என்று தெரிவித்தார்.