பாவனா… கடந்த மாதம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட கேரள நடிகை… தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த பாவனா, கொடூரமான சம்பவத்திற்கு பிறகு தற்போது மணவாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இணைந்துள்ளார்.. அவரது பேட்டியின் தொடர்ச்சி…

அப்புறம் எப்போதான் உங்க காதலைச்சொன்னீங்க?

கொஞ்ச நாட்களுக்கப்புறம் எங்களுக்கு புரிஞ்சு போச்சு நாங்க காதலி்ல் விழுந்துட்டோம்கிறது எங்க இரண்டு பேருக்கும் புரிஞ்சு போச்சு. ஆனால் காதலை யாரு முதலில் சொல்றது என்பதில் இருவருக்கும் தயக்கம்.

ஒரு கன்னட சினிமா ஷூட்டிங்கில்தான் எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். பின்னர் நான் வீட்டில் சொன்னேன். “நான் ஒருத்தரைக் காதலிகிறேன். அவர் வேறு யாருமல்ல..நவீன் … என்றேன்” அதைக்கேட்டு அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

காரணம் நவீனைப்போல ஒருவரைத்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க. அம்மாவுக்கு ஓ.கே. நவீன் மலையாளி இல்லை என்பதால் அப்பாவுக்கு விருப்பக்குறைவு. நவீனிடம் பேசிய பின்னர் அப்பாவுக்கும் ஓ.கே.

அப்புறம் நவீனின் வீட்டில் உள்ளவங்க இங்கே வந்தாங்க. நவீனின்  அப்பா 5 வருஷம் கொச்சி நேவியில் வேலை பார்த்திருந்தார். அதனால் அவருக்கு நல்லா மலையாளம் தெரியும்.  இதனால் அப்பாவுக்கும் மொழி பிரச்சனை இல்லை.

2015 இறுதியில் கல்யாணம் நடத்தலாம் என முடிவு செய்துட்டு போனாங்க. இந்த பேச்சு வார்த்தை நடந்தது ஒரு ஆகஸ்ட் மாதம். மறு மாதம் அப்பா இறந்து போனார். இப்படி ஒரு வருஷம் நீண்டு கொண்டு போனது.  அடுத்த வருடம் நவீனின் அம்மா கேன்சரில் இறந்து போனார். அது நடந்து ஒரு வருடம் ஆகும் நிலையில்தான் தென்னிந்தியாவை உலுக்கிய என்னை கடத்திய சம்பவம்.

இனி இப்போ இந்த வருஷத்துக்குள்ளாற கல்யாணம் நடத்தணும்னு முடிவு செய்தாங்க. நான் எதைப்பற்றியும் திட்டமிடவில்லை.. ஏன்னா பிளான் செய்தது போல ஒண்ணுமே நடக்கிறது இல்லைதானே.

கல்யாண நிச்சயதார்த்தம் தொடர்பா ஏதாச்சும் சொல்ல விரும்புறீங்களா?

மே 15.ம் தேதி திருமண நிச்சயம் நடத்த முதலில் தீர்மானிந்திருந்தோம். ஆனால் திடீர்னு மார்ச் .. தேதி நடத்த வேண்டியதா போச்சு.

5 நாட்களுக்கு முன்னர்தான் என்கிட்டேயே சொன்னாங்க. அப்போது நான் கடத்தல் வழக்கு தொடர்பான போலீஸ் ஸ்டேஷன் அலைச்சல் காரணமாக பெரும் மனக்குழப்பத்திலிருந்தேன்.

இதனால் மார்ச் 9.ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களையும் சில நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைக்க முடிந்தது.

சிலரிடம் விவரம் மட்டுமே தெரிவித்தோம். இருந்தும் வந்தார்கள். ஊருக்கே எனது திருமண நிச்சய வார்த்தை மீடியா மூலமாக தெரிந்தது. எல்லோரும் வாழ்த்தினார்கள். அது மிகுந்த சந்தோஷத்தைத்தந்தது.

கல்யாண நிச்சயதார்த்தம் மே மாதம் என தீர்மானித்து, பின்னர் மார்ச்சிலேயே நடத்தக்காரணம்?

என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைத்தொடர்ந்துதான் திருமண நிச்சயதார்த்தம் உடனே நடத்தப்பட்டது.  என்னுடைய வாழ்க்கையில் நான் விரும்பிய நபர் தவிர வேறு ஒருவருக்கு இடம் இல்லை. மனதால் கூட நான் வேறு யாருக்கும் துரோகம் செய்ய நினைத்தது இல்லை.  இருந்தாலும் எனக்கு துரோக செய்ய சிலர் முயற்சித்தார்கள் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.

அவர்கள் அப்படி செய்யட்டும். நான் எனது வேலையை பார்த்துக்கொள்கிறேன். அதில்லாமல் எனக்கு இன்னொருவரை தொந்தரவு செய்ய நேரமும் இல்லை.

எனது மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையா பேசுவேன். அது யாரா இருந்தாலும் சொல்வேன்.

நாமெல்லாம் மனுஷங்க தானே.. மனசுல ஒண்ணு வைச்சுட்டு வெளியில வேற மாதிரி சொல்றதுக்கு சிலரால எப்படி தோணுது. வெளிப்படையாக பேசியதால் ஏற்பட்ட நன்மை எதுன்னா எனக்கு நிறைய எதிரிகள் உருவானார்கள் என்பதுதான்.

அரசியல் எதிரிகளைப்போலவா சினிமாவில் எதிரிகள் ?

அப்படியும் சொல்லலாம். ஆனா எனது விஷயத்தில் நேர் எதிர்.எனக்கு நண்பர்கள் உண்டு.. எதிரிகள் உண்டு

.  என்னுடைய விஷயங்களைத்தெரிந்து கொள்வதற்காக ஒருவரை நண்பராக்கிக்கொள்வது. விஷயம் என்னன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அவங்களை கைகழுவுறது.

பின்னர் இன்னொருவரை நண்பராக்கிக்கொள்வது. இதெல்லாம் என்னால் முடியாது. இதனால் எனக்கு இழப்பு நிறைய.. என்னிடம் ஏதாவது தவறு உண்டு எனில் அதை மாற்றிக்கொள்ள நான் தயார்.

நான் தவறு செய்யலைன்னா எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? “சினிமா சான்ஸ்க்கா பாவனா மன்னிப்பு கேட்டார்”னு ஒருத்தர் சொல்றதை விட பாவனா அகம்பாவம் பிடித்தவர் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன்.

பதினைஞ்சு வயசுல நான் சினிமாவில் நடிக்க வந்தேன்.  அன்று முதல் என்னைப்பற்றி பிறர் கூறும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு காலும் கண்ணும் மூக்கும் வைத்து எதை எதையோ பேசினார்கள்.

சினிமாக்காரங்கன்னா யாரும் எதுவும் சொல்லலாம்னு நினைக்கிறாங்க போல. சினிமாக் காரங்கன்னாலும் அவங்களும் மனுஷங்க என்பதை பலரும் மறந்து போயிடுறாங்க.

நான் அபார்ஷன் பண்ணிட்டேன்னு என்னைப்பற்றி வெளியில் பலரும் செய்தி பரப்பினார்கள்.

அமெரிக்காவில்போய் அபார்ஷன் செய்தேன்..ஆலுவாயில் போய் அபார்ஷன் செய்தேன்.. திருச்சூரில் போய் அபார்ஷன் செய்தேன் என்றெல்லாம் கதை பரப்பினார்கள்.

ஒரு வருஷம் பத்து அபார்ஷன் கதைகள் பரப்பினார்கள். அதனால் எனக்கு அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நான் இப்பவும் அந்த டைரக்டரின் பிடியில் இருக்கிறேன் என்றெல்லாம் எழுதினார்கள். இது துவக்க காலத்தில் நடந்த கதை. சினிமாவில் நடிக்க வந்த வயது குறைந்த பெண் நான்.

இப்படி அவங்க வீட்டுல ஏதாவது பெண்களிருந்தால் இப்படி கதை பரப்புவாங்களா? இப்படி கிசுகிசுக்கள் பத்திரிகைகளில் வருவதைப்பார்த்து தலையில் கை வைத்து நிறைய தடவை அழுதி ருக்கிறேன். நினைத்தே பார்க்காத விஷயங்களைக்குறித்து என்னைப்பற்றிபத்திரிகையில் படித்து தலைசுற்றி விழுந்திருக்கிறேன்.

நான் இப்படிப்பட்ட செய்திகளைப்பார்த்து அழுதுகொண்டிருந்தபோது அப்பா, அம்ம, உறவினர்கள், நண்பர்கள் பலரும்,”நீ உண்மையா இருக்கே, நல்லவள்னு எங்களுக்குத்தெரியும்.

உன்னைத்தெரியாதவங்க எதுவேணும்னாலும் சொல்லிட்டுப்போகட்டும் வருத்தப்படாதே”ன்னு சொன்னாங்க.

சிந்திச்சுப்பார்த்தா அது சரின்னு தோணிச்சு. ஒரு சர்ச்சுல பாதிரியார் மோசமா நடந்துகிட்டாருன்னு எல்லா சர்ச்சுல உள்ள பாதிரியார்களும் மோசமாயிடுவாங்களா…

ஒரு சினிமா நடிகை மோசாமா நடந்து கொண்டால் எல்லா நடிகைகளும் பாதிப்புக்கு உள்ளாவது எப்படி? எல்லா இடங்களிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு என மன சமாதானமடைந்தேன்.

உங்களுக்கு ஏற்பட்ட மானசீக அவஸ்தையில் இருந்து எப்படி வெளியேறினீர்கள்?

நான் யார், எப்படிப்பட்டவர் என்பதை நான் மட்டும் அறிந்துகொண்டால் போதும்.. என்னுடைய உறவுகள் அறிந்தால் போதும்.

அதனால் என்னைப்பற்றி சொல்றவங்க என்ன வேணும்னாலும் சொல்லட்டும்  என்னைப்பற்றி சொன்ன கதைகளில் பெரிய கதை நான் சென்னையில் வைத்து ஒருவரை  துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றேன் என்பதே. இன்று வரை நான் ஒரு ஒரிஜினல் துப்பாக்கி எப்படி இருக்கும்னே பார்த்தது இல்லை.

இதுக்கு மேலே ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.  பத்து, இருபத்தி எட்டு அபார்ஷன், கொலை முயற்சி..இதெல்லாம் என்னோட பதினாறு வயதில் வெளியே பரப்பப்பட்ட கதைகள்..

அந்த மோசமானகடத்தல் நாடகத்தின் போது உலகம் முழுவதுமிருந்து உங்களுக்கு ஆதரவு பெருகியிருந்ததே..

ஆமாம், அது மனதுக்கு அருமருந்தாக இருந்தது. எனது வாழ்க்கையில் ஒரு மோசமான நிகழ்ச்சி நடந்த போது எனக்கு துணையாக இருந்தவர்கள், எனக்காக பிரார்த்தித்தவர்கள், உண்மையை வெளியே கொண்டு வர வேண்டுமென ஆசைப்பட்டவர்கள் நிறைய உண்டு.

முன்பு போல் என்னை எல்லோரும் மீது குற்றம் சுமத்தியிருந்தால் நான் ஒடுங்கிப்போயிருப்பேன். இரவில் என்பதால் தனியாக போகாமல் இருக்கலாம் என சிலர் பேசியுள்ளனர்.

ஆனால் எனக்கு ஆதரவாக 99 சதவிகிதம் பேரும் பேசியுள்ளனர். அது மகிழ்ச்சி. எல்லோருக்கும் தனித்தனியா நன்றி சொல்ல ஆசை..ஆனா அது நடக்க வாய்ப்பில்லை.அதனால் இங்கே சொல்றேன்.

கல்யாணத்துக்கு அப்புறம் நடிப்பீங்களா?

கல்யாணத்துக்கப்புறம் நடிக்க வேண்டாம் என நாங்கள் முடிவு பண்ணவில்லை.  நல்ல கேரக்டர் ரோல் கிடைச்சா கல்யாணத்துக்கப்புறமும் நடிப்பேன்.  சிலர் சொல்றதுமாதிரி சினிமாவுக்கு குட்பை சொல்லிட்டு என்னால போக முடியாது.  நான் இன்னிக்கு உங்ககிட்டே பேசுறேன்னா சினிமாதான் காரணம். இதனால் சினிமாவை என்னால் வெறுக்க இயலாது.

இப்போது நடந்த சம்பவத்திற்குப்பின்னால் கூட்டுச்சதி ஏதாவது இருந்திருக்கும் என எண்ணுகிறீர்களா?

இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. சினிமா லொக்கேஷனில் நடிகர், நடிகைகளின் வாகனங்கள் ஓட்டும் டிரைவருக்கு தனியாக இப்படி ஒ ரு தைரியம் வருமா? ஆனா, யார்? எதுக்கு? எப்படி? எப்போது? என்பதற்கான பதில் என்னிடம் இல்லை. சினிமாவில் என்னை எதிரிகளாக நினைப்ப வர்கள் செய்யும் வேலை இது என்றும் நான் நினைகவில்லை. எனக்கு நடந்த சம்பவம் பணத்துக்கானதாக மட்டும் நான் கருதவில்லை.

எனது மனதில் சில கேள்விகள் உண்டு. அதற்கு திருப்தியான பதில் எனக்கு கிடைக்காமல், வழக்கை  முடிக்க தீர்மானித்தால் எனக்கு வெற்றி கிடைக்கும்வரை போராட  வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

பெண்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஊர் உலகத்துக்கு தெரிந்த ஆள் என்பதால் என்னுடைய உடலில் கைவைக்க ஒருவருக்கும் தைரியம் வரக்கூடாது என நம்பிக்கை நம்மீது வைக்கவேண்டும்.

ஒன்று சொல்றேன். எனக்கு நடந்தது. நாளைக்கு யாருக்கும் நடக்கலாம். நான் எனக்கு நடந்த சம்பவத்தை வெளியே சொன்னேன்னா, இதை வேறு பெண்களும் வெளியில் சொல்லலாம். மனதில் மூடி மறைக்கக் கூடாது.

வேட்டைக்காரனை எதற்கு நான் தப்பித்துக்கொள்ள உதவவேண்டும். வெட்கப்பட்டு தலை குனிந்து நடக்க வேண்டியது பாதிக்கப்பட்ட பெண்கள் அல்ல.  நம்மிடம் மோசமான முறையில் நடந்துகொண்டவர்களே..

பாதிக்கப்பட்டவளை தனிமைப்படுத்தாமல் அவளது குடும்பத்தினரும்,உறவுகளும், நண்பர்களும் துணை இருந்தால் அவளை யாராலும் தோல்வியடையச்செய்யமுடியாது.

எனக்கு நடந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்தால் பத்துபேர் மட்டுமே அறிந்திருப்பார்கள். ஆனால் என்னால் நாளை தலை உயர்த்தி நடந்திருக்க முடியாது. மனசாட்சி என்னை கேள்வி கேட்டுக்கொல்லும். என்னால் சமாதானமாக படுத்து உறங்க முடியாது.

அதனால்தான் என்னிடம் மோசமாக நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை கேட்டு போலீசில் புகார்கொடுத்தேன். இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது  பற்றிஎனக்கு தனிப்பட்ட சில தீர்மானங்கள் உண்டு.