சென்னை: மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து எனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் என 154 பேரிடம் ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில்,அப்போலோ வழக்கு காரணமாக விசாரணை தடை பட்டது. பின்னர் மார்ச் 7ந்தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.  சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட அப்பல்லோ டாக்டர்களிடம் மறு விசாரணை நடத்தியது. இவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொண்டது.

இதையடுத்து இன்றைய விசாரணையில், சசிகலா அண்ணா இளவரசி, முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆஜராக 9-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.  பல முறை சம்மன் அனுப்பியும்ஆஜராகாமல் இருந்து வந்த ஓபிஎஸ் இன்று ஆஜரானார். அவரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது, ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமியிடம்,  ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கைவிரித்துள்ளார்.

மேலும் 2016ம் ஆண்டு  நடைபெற்ற சென்னைமெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது என்று கூறியவர், அவர் 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி அன்று  சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில், விசாரணை ஆணைய கோப்பில் கையெழுத்திட்டதாகவும் கூறியவர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நடைபெற்ற காவிரி கூட்டம் தொடர்பான கேள்விக்கு, தனக்கு  எதுவும் தெரியாது  என்று கூறியவர், காவிரி கூட்டம் குறித்து அறிக்கை வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் என்றும், இதுதொடர்பாக  அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவிடம் கூட்டம் தொடர்பாக கேட்டபோது, முதலமைச்சர் தனக்கு டிக்டேட் செய்ததாக கூறியவர், உடல்நலன் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொள்வேன்  என்றும் கூறினார்.

முன்னதாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த சசிகலா அண்ணி இளவரசி,  அப்போலோவில் ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என இளவரசி தெரிவித்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அப்போலோ சென்றபோதும் ஓரிருமுறை கண்ணாடி வழியாக பார்த்தேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.