விருதுநகர்: 10 ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த இரண்டு பேரில் ஒருவரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், தான் முதலிடம் பிடித்தது எப்படி என்பதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

 வெற்றி ரகசியம் என்ன என்பதை தெரியப்படுத்தினார். 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் எழுதினார்கள்.  இவர்களை தவிர 48 ஆயிரத்து 564 பேர் தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதினர். 
இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவக்குமார் மற்றும்  நாமக்கல் மாவட்டம் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்த பிரேம சுதா ஆகிய இருவரும்  500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.   

sivakumar400
முதலிடம் பெற்ற பிரேமசுதா, மருத்துவர் ஆவதே தனது லட்சியம் என்று  தெரிவித்தார்.   மற்றொரு முதலிட மாணவரான விருதுநகர் நோபல் மெட்ரிக் பள்ளியில் பயின்ற சிவகுமாரி்டம்  பேசியபோது, “ என் அப்பாவுக்கு  அரசு வங்கியில் பணி.  அவருக்கு  என்னை ஆடிட்டர் ஆக்க வேண்டும் என்று விருப்பம். இதை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அதுவே என் மனதில்  ஆழமாக பதிந்துவிட்டது.

சிறுவயதில் இருந்தே ஆடிட்டர் ஆவது என்பதே என் கனவாகிவிட்டது.  வீட்டு சுவற்றில் எல்லாம்  “சிவக்குமார் சி.ஏ ’என்று எழுதி வைப்பேன்.

பத்தாம் வகுப்பிலேயே நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்பதால் நாள் முழுக்க படித்துக்கொண்டே இருப்பேன்.  எங்கள் பள்ளியில் மாநில அளவில் முதலிடம் பெறுவது இதுதான் முதல் முறை.

அடுத்து ப்ளஸ் 1 ல் காமர்ஸ் குரூப் எடுத்து படிப்பேன்.  கண்டிப்பாக ப்ளஸ் 2 விலும் மாநிலத்திலேயே முதலாவதாக வருவேன்” என்றார்.

வாழ்த்துகள் சிவகுமார்!