சென்னை: நான் ஐபிஎல் போட்டிக்கேற்ற பவர் ஹிட்டர் இல்லைதான்; ஆனாலும், என்னால் கோலி மற்றும் ரோகித்திடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்றுள்ளார் ஐபிஎல் தொடருக்காக சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள டெஸ்ட் வீரர் சத்தீஷ்கர் புஜாரா.

அவர் கூறியுள்ளதாவது, ”டி-20 போட்டி என்றாலே ஸ்ட்ரைக் ரேட் வேண்டும். உண்மையில் எனக்கு அந்த ஸ்ட்ரைக் ரேட் இல்லை. நான் பவர் ஹிட்டர் பேட்ஸ்மேன் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேநேரத்தில், விராத் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரிடமிருந்து நான் கற்றுக்கொள்வேன். நான் சிறந்த பவர் ஹிட்டர் இல்லை என்றாலும் பந்தைச் சரியான டைமிங்கில் அடிக்கும் திறமை இருக்கிறது

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், இதற்கு மிகப்பெரிய உதாரணம். சாதாரண பேட்ஸ்மேனாக அணிக்குள் வந்து, இன்று 3 பிரிவுகளிலும் ஆடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். கேன் வில்லியம்ஸன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோ வீரர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இந்த வீரர்கள் ரன் ஸ்கோர் செய்வதற்குத் தேவையான ஷாட்களையும் ஆடுவார்கள். அதே நேரத்தில் புதுமையான ஷாட்களையும் அடிப்பார்கள்.

எனக்கும் அதே மனநிலை இருக்கிறது. நான் வெற்றி பெற விரும்பினால், நானும் வித்தியாசமான ஷாட்களை ஆட வேண்டும். அதே நேரத்தில், சரியான ஷாட்களை ஆடி ரன்களையும் சேர்க்க வேண்டும். அதற்கு அதிகமான சக்தியை வெளிப்படுத்தி அடிக்க வேண்டும். சரியான ஷாட்களை ஆடுவதற்குச் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் தேவை.

இவை எல்லாம் அனுபவத்தின் மூலம்தான் வரும். நான் கடந்த காலங்களில் டி-20 தொடர் விளையாடியபோது, என் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் எனச் சிறிது கவலைப்பட்டேன். தொழில்நுட்ப ரீதியாகச் சில தவறுகளைச் செய்ததால், நான் ஐபிஎல் தொடரை விட்டு ஓரங்கட்டப்பட்டேன்.

ஆனால், இப்போது, அதைக் கடந்துவிட்டேன். என்னுடைய இயல்பான ஆட்டம் எது, வலிமை எது என்பதை இந்தக் காலகட்டத்தில் உணர்ந்துவிட்டேன். இனிமேல் என்னை அனுப்ப முடியாது.

இந்த அறிவுரைகளை நான் திராவிட்டிடம் நீண்ட காலத்துக்கு முன்பு பெற்றேன். உங்களின் இயல்பான ஆட்டம் உங்களை விட்டு எப்போதும் செல்லாது. ஆதலால், வித்தியாசமான ஷாட்களை ஆடிப் பழகுங்கள் என்று திராவிட் அறிவுரை கூறினார்.

ஆதலால், நான் டி-20 போட்டி விளையாடிவிட்டு, டெஸ்ட் தொடருக்குப் போனாலும், என்னால் அதற்கு ஏற்ப மாற முடியும். டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டு, டி-20 தொடருக்கு வந்தாலும் என்னால் அதற்கு ஏற்ப பேட் செய்ய முடியும். நாம் என்ன விளையாடுகிறோம் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்” என்றுள்ளார் புஜாரா.