சென்னை:  தன்மீது ‘எத்தனை வழக்குகள் போட்டாலும்  அதை எதிர்கொள்வேன்,  நான் சோர்வடைய மாட்டேன்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் தான் ஏஐ இல்ல, ஒரே நேரத்தில் பல இடங்களிள் ஆஜராக என்றும் காவல்துறையினரின் தொடர் சம்மன் குறித்தும் விமர்சனம் செய்தார்.

பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததை எதிர்த்து, திமுக உள்பட சில கட்சிகள் போராட்டங்களை நடத்தியதுடன், அவர்மீது மாநிலம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் புகார் கொடுத்துள்ளது. இதன்பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சீமானுக்கு தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தொடர் சம்மன் அனுப்பப்பட்டுவருகிறது. இது சீமானை முடக்கும் திமுக அரசின் நடவடிக்கை என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த   சீமான் கூறியதாவது: ஈ.வெ.ரா., குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை, அவர் பேசியதை தான் கூறினேன்.  பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.  பெரியார் இதெல்லாம் பேசி இருக்கிறார் என்று நான் சொன்னால் இதெல்லாம் பேசவில்லை என்று மறுக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் பேசினார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறாக பேசக்கூடாது. படம் பொய். பார்த்தது பொய் என்று பேசக்கூடாது.

தன்னால் அவர்களுக்கு நெருக்கடி இருப்பதால் தான் இவ்வாறு செய்கிறார்கள். *அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.    என் மீது எல்லா இடங்களிலும் வழக்கு பதிவு செய்து சோர்வடைய செய்ய அரசு முயற்சி செய்கிறது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன், அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன்.  யாருக்கு பயம்? இதுக்கெல்லாம் நான் பயப்படுறவன் கிடையாது. எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளுவேன்.

ஒரே நீதிமன்றத்தில், ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். நாளை விக்கிரவாண்டிக்கு ஒரு வழக்கிற்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு வழக்காக எதிர்கொள்வேன்.

ஒரு ஆள் தான் இருக்கிறேன். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, என்னை மாதிரி நான்கு, ஐந்து பேரை உருவாக்கி அனுப்ப முடியாது. என்னால் தான், அவர்களுக்கு நெருக்கடி. அதிகாரத்தில் இருப்பவர்கள் இது நிலையானது என்று நினைப்பது சிரிப்பாக இருக்கிறது. ஏதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன். என்னை ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைத்து, என்னை உறுதியாக நிற்க வைத்தது கருணாநிதி தான்.

இப்பொழுது எனக்கு படிப்பதற்கு நேரம் குறைவாக இருக்கிறது. சிறையில் அடைத்தால் இன்னும் நிறைய படிக்கலாம். அறிவை வளர்த்து கொள்ளலாம்.

 தகைசால் தமிழர் விருதுக்கு மாற்றாக தகைசால் திராவிடர் விருது கொடுக்க வேண்டியதுதானே.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.