இயற்கை நான் –  கவிஞர் ராஜ்குமார் மாதவன்

நுண் கிருமி
என் படைப்பில் ஒன்று
உன் கண்ணுக்கு தெரியாது
ஆனால், கண்கலங்க செய்தது
யார் நான் ?
நானே இயற்கை !

என் படைப்பில்,
ஒரு சிறுதுரும்பு நீ !
என் பிள்ளைகள் எத்தனை
ஆழ் கடலில்,
நீல வானில்,
அகண்ட நிலத்தில்,
நீ அறிந்த,
இன்னும் அறியாத,
எத்தனை உடன் பிறப்பு,
அத்தனையும் கூடி வாழ,
எத்தனை வாய்ப்புகள் !
ஆனால், எல்லாம் நீ என்றாய்
அனைத்தும் உனக்கென்றாய் ?
ஒரு நுண் படைப்பு
உன்னை முடக்கியது
உயிரை யாசிக்கிறாய்
என்னை பூசிக்கமறந்து ?

என் பிரபஞ்சம்,
என் பிரம்மாண்டம்,
என் அகண்டம்,
எதை அறிந்தாய் நீ ?

நீ செய்த குழப்பம் என்ன ?
உன் பேராசை,
எல்லை எங்கே ?

மரம் வெட்டி,
மலை குடைந்து,
கல் எடுத்தாய்,
மழை நின்றது!

ஊர் விரட்டி,
சாலை அமைத்தாய்,
இன்று யார் பயணிப்பது.
என்னை பூசிக்க,
கடவுள் என்றாய்,
மதம் என்றாய்,
மதத்திற்கு ஒரு கோவில் என்றாய்,
மதத்தை அழித்து,
மதம் வளர்த்தாய்!
வழிபாடு முடித்து,
குரல் வலையை அறுத்தாய்,
மதம் என்ற போர்வையில்,
வன்முறையை விதைத்தாய் !- இன்று,
வழிபாட்டு தளம் பூட்டி,
வீட்டினில் முடங்கினாய் !

காடுகள் அழித்தாய்,
குட்டைகள் அழித்தாய்,
ஏர் நிலம் அழித்தாய்,
சுடுகாட்டிலும் வீடு கண்டாய் -இன்று
சுடுகாட்டிலும்
இடம் இன்றி
வீதியில் எரிகின்றாய்.

உலகெங்கும் ப்ராணவாய்வு,
உனக்கு மட்டும் போதவில்லை,
தொழிற்சாலை கொண்டு
தயாரித்தாய்,
இருந்தும் போதவில்லை,
செத்து வீழ்ந்தாய் !

மரம் வளர்த்தால்,
பல்லுயிர் நேசித்தால்,
உயிர் வளர்க்கலாம்
சொல்லி வளர்ந்தால்
சொர்க்கத்தில் நீ !

பொருளியல் மேன்மை,
உலக பொருளாதாரம்,
சர்வதேச வர்த்தகம்,
அத்தனையும் உன் படைப்பு !

தாய், தந்தை,
தாத்தா,பாட்டி,
மகன், மகள்,
அத்தை, மாமா,
தோழர், தோழி,
ஊர், உறவு,
உற்றார், உறவினர்,
செடி, கொடி,
மலை, மரம்,
நாய், பூனை,
கடல், கரை,
நதி, அருவி,
பூ, விருட்சம்,
தேன், தென்றல்,
இதுதான் என் படைப்பு.
நின்று பழகிப்பார்
உயிர்மை புரியும் என்றேன்!
இன்று உன்னை நிறுத்தி,
பழகச்செய்தேன்,
சொர்க்கத்தில் நீ,
புரிந்தவனா நீ !
.
அமைதி கொள்,
என்னை தேடு,
உன்னிலும் இருப்பேன்,

அமைதி கொள்,
அகம் திற,
என் மொழி
கேட்கும்,
என் அழுகை,
என் சிரிப்பு,
என் பூரிப்பு,
என் மகிழ்ச்சி,
அத்தனையும் நீ காண்பாய்,
சொர்க்கத்தில் நீ,
புரிவாய் நீ !