சென்னை:

மமுகவில் இருந்து விலகிய இசக்கி சுப்பையா, வரும் 6ந்தேதி மீண்டும் தாய்க்கழகத்தில் இணையப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

டிடிவி தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி, தங்கத்தமிழ் செல்வன் என பல பெருந்தலை கள் மாற்றுக்கட்சிகளுக்கு அடைக்கலம் தேடி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், அமமுகவின் முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையாவும் டிடிவியின் ஆணவப்போக்கு காரணமாக அங்கிருந்து விலகி  திமுக அல்லது அதிமுகவில்  ஐக்கியமாக முடிவு செய்திருப்பதாக கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில், தனது நிலை குறித்து இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்த இசக்கி சுப்பையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  வரும் 6ந்தேதி  தான் மீண்டும் தாய்க் கழகத்தில் இணையப் போவதாக தெரிவித்தார்.

அப்போது, கடந்த அதிமுக ஆட்சியின்போது,  48 நாள் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என என்னை டிடிவி தினகரன் கிண்டல் செய்தார்,  இது ஒரு தலைவருக்கு அழகல்ல என்று டிடிவியை கடுமையாக சாடினார்.. சல நிமிடங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது என்றும், தினகரனே தொண்டர்களால் அடையாளம் காட்டப்பட்டவர் தானே என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

அதிமுகவில் என்னை அடையாளம் காட்டியது தினகரன் அல்ல, என்னை அடையாளம் காட்டி யவர் ஜெயலலிதா, தினகரன் ஏன் தவறாகவே பேசுகிறார் என தெரியவில்லை என்று  தெரிவித்த வர், தனக்கு பாஜக மற்றும் திமுகவில் இருந்து அழைப்பு வந்தது, ஆனால், என் உடன் இருந்த வர்கள் விருப்பத்தின் பேரில் அதிமுகவில் இணைய முடிவு செய்தேன்.

மக்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார்; நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம் என்று தெரிவித்தவர் 6 தேதி முதல்வர் துணை முதல்வர் முன்னிலையில் 25,000 பேர் தென்காசியில் நடைபெறக்கூடிய விழாவில் அதிமுகவில் இணைய உள்ளோம் என்றும் கூறினார்.

கடந்த 2011ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவர் இசக்கி சுப்பையா. ஜெயலலிதா அமைச்ரவையில் சிறிது காலம் சட்டத்துறை அமைச்சராக  பொறுப்பு வகித்தார். கடந்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்பட வில்லை.

இந்த நிலையில், ஜெ.மறைந்தவுடன்  அதிமுக பிளவுபட்டபோது, டிடிவி தினகரன் கட்சிக்கு தாவினார் இசக்கி சுப்பையா. இவருக்கு சொந்தமான அசோக்நகர் இடத்தில்தான் அமமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இவர் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். இந்த நிலையில், இசக்கி சுப்பையாவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் குற்றாலத்தில் உள்ள தனது எஸ்டேட்டில் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்தவர், அதிமுகவில் சேருவதாக, திமுகவில் சேருவதாக என்று குழம்பிய நிலையில் காணப்பட்டார். அவரை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது கட்சிக்கு இழுக்க வலை வீசி வந்தது.

இந்த நிலையில், வருகிற 6ம் தேதி இசக்கி சுப்பையா தலைமையில் தென்காசியில் நடக்கும் விழாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமமுகவினருடன்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில்  அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிவித்து உள்ளதார்

இந்த இணைப்பு விழாவிற்காக தென்காசியில் உள்ள இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவருடன் அதிமுகவில் சேர வருவோருக்கு தடபுடலாக கறி சாப்பாடு என சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.