“கேமரா இல்லாமல்கூட,  அரசியல்  விவாதங்களை நடத்தி விடலாம். சி.ஆர்.சரஸ்வதி இல்லாமல் ஒளிபரப்ப  முடியாது“ என்பது தொலைக்காட்சிகளின் சமீபகால விதிகளில் ஒன்று. அதற்கேற்ப தனது கருத்துக்களை எந்தவித தயக்கமும் இன்றி அதிரடியாக வெளிப்படுத்தி, தொலைக்காட்சிகளுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் வரம் அளித்தவர்.

“வடிவேலுவைவிட சிறந்த காமெடியன் ஓ.பி.எஸ்.” என்ற அவரது முழக்கம் ஒரு உதராணம்.

இதற்கிடையே திடீனரென சி. ஆர்.சரஸ்வதியை தொலைக்காட்சிகளில் காண முடியவில்லை. இந்தநிலையில் இன்று காலையில் இருந்து, சி.ஆர்.சரஸ்வதியின் உடல்நலம் குறித்து அதிர்ச்சிகரமான பதிவுகள் சமூகவலைதளங்களில் உலவிக்கொண்டிருக்கின்றன.

இதையடுத்து சிறிது முயற்சி எடுத்துசி. ஆர்.சரஸ்வதியை தொடர்புகொண்டோம். முதலில் பேச மறுத்தார். சமூகவலைதளங்களில் அவரது உடல்நலம் பற்றி வலம்வரும் பதிவுகளைப் பற்றிச்சொன்னோம்.

சிறிது மவுனத்துக்குப்பிறகு “நான் நல்ல உடல்நலத்துடன்தான் இருக்கிறேன்” என்றவர்,  “வாட்ஸ்அப், பேஸ்புக் உட்பட சமூகவலைதளங்கள் எதையும் நான் பார்ப்பதில்லை. நான் கட்சி ரீதியாக கூறிய கருத்துக்களைப் பிடிக்காதவர்கள் பதிலுக்கு கருத்துக்களைத் தெரிவித்தால் பரவாயில்லை.

ஆனால் எனக்கு போன் செய்து ஆபாசமாக அருவெறுப்பாக பேசினார்கள் . வாட்ஸ்அப்பில் உலவும் நபர்கள் மிகமோசமான வார்த்தைகளால் என்னை ஏசினார்கள்.

தாய், தந்தையை இழந்தவள் நான். திரைப்படம், கட்சிப்பணி என்று எனக்கெனதனிப்பட்ட வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளாமல் வாழ்கிறேன். என்அண்ணன் குடும்பத்தாருடன் வசிக்கிறேன்.

என்அரசியல் கருத்துக்கள் பிடிக்காத சிலர் என்ன மிக ஆபாசகமாக தொடர்ந்து பேசினார்கள். புதுப்புது எண்களில் இருந்து போன்வரும். வெளிநாட்டில் இருந்துவரும் நெட் நம்பர்களில் இருந்தும் அழைப்புவரும். போனை எடுத்தால் ஒரே வசவுதான் காதுகொடுத்து கேட்கமுடியாது. வாட்ஸ்அப்செய்திகளும் அப்படித்தான்.

இதனால் வாட்ஸ்அப் எண்ணையே நீக்கிவிட்டேன். இப்போது என் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவதாக நண்பர்கள் கூறினார்கள். ஆனாலும் கவலைப்படவில்லை.

அதேநேரம் வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்களில் உலவும் நபர்கள் ஒரு விசயத்தை யோசிக்க வேண்டும். அவர்களும் ஒரு பெண்ணுக்குத்தான் பிறந்திருக்கிறார்கள். அவர்களது மனைவியோ சகோதரியோகூட பெண்தான்.

ஆனால் எவ்வளவு கொச்சையாக பேசமுடியுமோ, எழுத முடியுமோ அந்தஅளவுக்குக் கீழ்த்தரமாக விமர்சித்து விட்டார்கள்.

தனிப்பட்ட முறையில இது போன்றவர்களை நான் மனிதனாகவே மதிப்பதில்லை. அவங்களை நான்மனுசனாவே மதிக்கிறதில்லை.” என்று ஆதங்கத்துடன் கூறினார் சி.ஆர்.சரஸ்வதி.

“அதனால்தான் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டீர்களோ.. சமீப நாட்களாக தொ.கா. விவாதங்களில் பார்க்க முடியவில்லையே” என்றோம்.

அதர்கு சி.ஆர்.சரஸ்வதி, “அட.. இதுக்கெல்லாம் அசருகிற ஆள் நான் அல்ல. தற்போது அ.தி.மு.க.வில் சிறு குழப்பநிலை ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் மனவருத்தம்தான் இது. விரைவில் தெளியும். அதுவரை அரசியல் ரீதியான கருத்துக்களை தவிர்ப்போம் என்றுதான் அமைதியாக இருக்கிறேன்” என்றார்.

“சரி..தற்போது ஆட்சி கவிழும் சூழல் நிலவுகிறதே” என்றோம்.

“அம்மாவின் ஆட்சி, அவர்களுக்குப் பிறகு இன்னும் நூறாண்டு, நூறாண்டு தொடரும். தற்போது நடப்பது குடும்பத்துக்குள் நடக்கும் சிறுகுழப்பம்தான். இதைத்தாண்டி அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபட்டு அம்மாவின் ஆட்சியைக்காப்போம்” என்று முடித்துக்கொண்டார் சி.ஆர்.சரஸ்வதி.

– டி.வி.எஸ். சோமு