தராபாத்

ள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதையொட்டி 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

ஐதராபாத் நகரில் ரச்சகொண்டா பகுதியில் உள்ள ஜோதி உயர்நிலைப் பள்ளி என்னும் தனியார் பள்ளி ஒன்றில் சாய் தீப்தி என்னும் மாணவி 9 ஆம் வகுப்பில் படித்து வந்துள்ளார்.    அவர் குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிக் கட்டணமான ரூ. 2000 செலுத்தாமல் இருந்துள்ளார்.   இதற்காக அவரது வகுப்பு ஆசிரியை அந்த மாணவியை ஒரு நாள் முழுவதும் வகுப்புக்கு வெளியில் நிறுத்தி வைத்துள்ளார்.   மேலும் அவரைக் கண்டபடி திட்டி,  தேர்வு எழுதவும் தடை விதித்துள்ளார்.

வீட்டுக்கு வந்ததும் சாய் தீப்தி தனது தங்கையிடம் இதைக் கூறி அழுதுள்ளார்.   அப்போது அவரது பெற்றோர்கள் வீட்டில் இல்லை.  இது குறித்து தனது தாயாரிடம் தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.  சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்ணின் தாயார் மீண்டும் அவரை அழைத்த போது பதில் இல்லாமல் இருந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.  அங்கு சாய் தீப்தி மின்விசிறியி தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதைக் கண்டு பதறி உள்ளார்.   தனது தற்கொலைக்கான காரணத்தை சாய் தீப்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அந்தக் கடிதத்தில் “என்னை அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.   சாரி அம்மா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி உமா மகேச்வர் பள்ளி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்துள்ளார்.    ஒரு சிறுமியை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு கொடுமை செய்த பள்ளி நிர்வாகம் மீதும், வகுப்பு ஆசிரியை மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கூறி உள்ளனர்.     இது குறித்து பள்ளித் தரப்பில் இருந்து இதுவரை எதுவும் கூறவில்லை.

இது குறித்து குழந்தைகள் உரிமை நல அமைப்பின் தலைவி அனுராதா ராவ், “ரூ.2000 என்பது ஒரு சிறுமியின் வாழ்க்கையை விட மதிப்பானதா?   பாக்கி இருந்தால் அந்தப் பெண்ணை தேர்வு எழுத அனுமதித்து விட்டு பின்பு வசூலித்திருக்கலாமே.   அதை விடுத்து ஒரு குழந்தையை கொடுமைப்படுத்த எப்படி மனது வந்தது?   பெற்றோர்கள் பணம் கட்டவில்லை எனில் குழந்தையை தண்டிப்பது முறை அல்ல” எனக் கூறி உள்ளார்.

மேலும் இந்தப் பள்ளி நிர்வாகத்துக்கும் ஆசிரியைக்கும் கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனவும்,  அதைப் பார்த்து மற்ற பள்ளி நிர்வாகம் எதுவும் இத்தகைய கொடுமையை எந்தக் குழந்தைக்கும் செய்ய பயப்பட வேண்டும் எனவும் அனுராதா கூறி உள்ளார்.