சென்னை:

தூத்துக்குடியில் மிருகத்தனமாக செயல்பட்டு பொதுமக்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியது  தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நேற்றைய போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய மிருகத்தனமான, மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூடு காரணமாக 12 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூட்டுக்கு இந்தியா முழுவதும் உள்ள  பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில்,  இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார் எனக் கேட்டு, வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, பார்வேந்தன்,காளிமுத்து ஆகியோர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த

வழக்கை அவசர வழக்காக இன்றே எடுத்து விசாரிக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.