சீனாவின் வுஹான் மகாணத்தில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தின் அருகில் இருக்கும் இறைச்சி சந்தையில் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை உலகம் முழுவதும் பலிவாங்கியிருக்கிறது.

இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் இன்னும் அடங்காத நிலையில் உலகின் பிற பகுதிகளில் மூன்றாவது அலை தொடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு அலையிலும் கொத்துக் கொத்தாய் உயிர்களை கொண்டுசெல்லும் இந்த கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூறப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்பும் இவ்வாறே கூறினார். தேர்தலில் வெற்றி பெற அரசியல் ஆதயம் தேடும் நோக்கில் அவ்வாறு கூறுகிறார் என்று அப்போது கூறினர்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பழைய பல்லவியை பாட ஆரம்பித்திருக்கின்றன அமெரிக்க பத்திரிக்கைகள்.

இதற்கு ஆதாரமாக அனுபவமற்ற சில தரவு விஞ்ஞானிகள் பதிவிட்டுள்ள அறிக்கையை கையிலெடுக்கும் இந்த பத்திரிக்கைகள், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்கு அமெரிக்க அதிபரை தள்ளியிருக்கிறது.

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மொஜியாங் சுரங்கத்தில் 2012 ம் ஆண்டு மூன்று பேர் மரணமடைய காரணமாக இருந்த RaTG13 வைரஸ் தான் தற்போது உலகையே துவம்சம் செய்து வருகிறது.

அந்த வைரசை சுரங்கத்தில் இருந்து கொண்டுவந்து ஆய்வக சூழலில் ஆராய்ச்சிக்காக வைத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அது ஆய்வகத்தை விட்டு வெளியேறியதன் காரணமாகவே சீரழிவு ஏற்பட்டுள்ளது.

இதனை ஒப்புக்கொள்ள மறுக்கும் சீனா இந்த வைரஸ் குறித்த தரவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை தனது கணினியில் இருந்து நீக்கியிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தரவு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி : சீனாவின் வுஹான் ஆய்வக மர்மம் உடைந்தது…. கொரோனா வைரஸ் பரவல் குறித்த புலணாய்வில் தரவு விஞ்ஞானிகளின் சாதனை

இவையனைத்தும் கடந்த ஓராண்டாக பேசப்பட்டு ஓய்ந்த நிலையில் தற்போது அமெரிக்கா மீண்டும் இதை கையிலெடுத்திருப்பதால் சீனா தனது நிலையை மாற்றிக்கொள்ளுமா என்பதும் அவ்வாறு நிகழ்ந்ததை அமெரிக்கா நிரூபிக்கும் பட்சத்தில் உலக நாடுகளுக்கு சீனா இழப்பீடு தருமா அல்லது சீனா மீது தடை ஏதும் விதிக்கப்படுமா என்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.