உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ்   விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவி இயற்கையாக தோன்றியதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை தீவிர ஆய்வு செய்து அதன் அறிக்கையை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க உளவுத் துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து வெளியேறிய ஒன்று என்று கடந்த ஆண்டு துவக்கத்தில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகள், பின்னர் அதுபோல் நிகழ வாய்ப்பில்லை என்று கூறின.

தற்போது இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ள நிலையில், இது சீனாவின் ஆய்வுகூடத்தில் இருந்து வெளியேறிய வைரஸ் தான் என்று மீண்டும் கூறிவருகின்றன, செய்தி நிறுவனங்களின் இந்த முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை.

லட்சக்கணக்கான உயிர்களை உலகமெங்கும் பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் பல கோடி மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது, இந்த வைரஸ் விட்டுச்சென்றிருக்கும் தடயங்களை கொண்டு மனித இனம் விடைதேடிக் கொண்டிருக்கிறது.

மெத்தப்படித்த மேதாவிகள் மட்டுமன்றி, சாமானியர்களும் இதேகேள்வியுடன் விடை தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

‘தி சீக்கர்’ என்ற பெயருடன் ட்விட்டரில் வலம்வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சாமானியர் இதற்கான விடையை தெரிந்துகொள்வதில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

பீட்டர் டஸ்சாக் என்ற விஞ்ஞானி இது முழுக்க முழுக்க விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ் தான் என்று ஆணித்தரமாக கூறியதை அடுத்து இது இயற்கையாக தோன்றிய வைரஸ் தான் என்று ஆரம்பத்தில் நினைத்த ‘தி சீக்கர்’. இதுகுறித்து தனது ஆய்வை தொடர்ந்த போது ஆய்வின் போக்கு அவரின் முடிவை மாற்றியது.

ஷி ஜெங்க்லீ

விஞ்ஞானி பீட்டர் டஸ்சாக்கிக்கும் வுஹான் ஆய்வுகூட விஞ்ஞானி ஷி ஜெங்க்லீயும் இணைந்து பல்வேறு ஆய்வறிக்கைகளை தயாரித்து வழங்கிய உண்மை தெரியவந்தது, அந்த ஆய்வுகளுக்காக பலகோடி ரூபாய் நிதியை அமெரிக்காவிடம் இருந்து பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரிவந்தது, அதோடு டஸ்சாக் சோதனை கூட வைரஸ் பற்றிய கூற்றை கண்மூடித்தனமாக எதிர்த்து வந்ததும் அவரது கட்டுரைகள் மற்றும் பேட்டிகளில் இருந்து உறுதிப்படுத்திக்கொண்டார்.

இது தவிர, 26 விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கூட்டாக ஒரு கடிதத்தை தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிட்டிருந்தார், அதில் கொரோனா வைரஸ் இயற்கையாக  உருவானது என்பதை தான் மட்டுமல்ல தன்னுடன் சேர்ந்த விஞ்ஞானிகளும் அறிவார்கள் என்பது போல் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பீட்டர் டஸ்சாக்கின் இந்த கூற்றை ஏற்றுக்கொண்டவர்களில் முக்கியமானவர் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், அறிவியல் பூர்வமாக இந்த விவகாரத்தை அணுகாமல் அதை அரசியலாக்கியதன் மூலம் டஸ்சாக்குடன் மறைமுகமாக கைகோர்த்தார் என்றே சொல்லப்படுகிறது.

அறிவியல் பூர்வமாக அணுகாமல் அரசியலாக்குவதன் மூலம் தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திக்கொள்ள நினைத்த டிரம்ப், சீனாவுக்கு ஆதரவான கருத்தைக் கூறிய டஸ்சாக்கை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோணத்தில் அணுகியதோடு, டஸ்சாக்கின் ஈகோஹெல்த் அல்லையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய வைரஸ் குறித்த ஆய்வு ஒப்பந்தங்களை ரத்து செய்தார்.

பீட்டர் டஸ்சாக்

கொரோனா வைரஸ் குறித்த உண்மையை கண்டுபிடிக்க தன்னை போல் ஆர்வம் காட்டி வந்த நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு டிராஸ்டிக் (Decentralized Radical Autonomous Search Team Investigating COVID-19 – DRASTIC) என்ற பெயரில் தி சீக்கர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.

இணைய தளம், சமூக வலைத்தளம் மற்றும் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை பிரித்து மேய்ந்த இவர்கள், இது தொடர்பாக கிடைத்த சிறு துரும்பையும் விட்டுவைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.

இந்த குழுவில் இடம்பெற்றிருந்த கனடாவைச் சேர்ந்த யூரி டெய்ஜன், வுஹான் ஆய்வுகூட விஞ்ஞானி ஷி ஜெங்க்லீ வெளியிட்டிருந்த ஒரு ஆய்வு கட்டுரையை பார்த்தார், அதில் சார்ஸ் கோவ் 2 வைரஸ் குறித்த விரிவான விளக்கத்தை கூறிய ஷி ஜெங்க்லீ, இது 2002 முதல் 2004 வரை 774 பேரை பலிவாங்கிய சார்ஸ் வைரஸ் வகையைச் சார்ந்தது என்று கூறியிருந்தார், அதோடு, அந்த கட்டுரையில், RaTG13 என்ற புதிய வகை வைரஸை பற்றியும் விவரித்திருந்தார், இந்த புதிய வைரசும் சார்ஸ் வகையுடன் ஒத்துப்போனதாக அதில் கூறியிருந்ததை தவிர அந்த கட்டுரையில் வேறு எந்த விரிவான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

RaTG13 வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது அதில் குறிப்பிடப்படவில்லை.ஆனால் இதற்கு முன் சீனாவின் யுனான் மாகாணத்தில் தோன்றியதாக மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெய்ஜனுக்கு இந்த கட்டுரை குறித்த சந்தேகம் வலுவாக எழுந்ததை தொடர்ந்து ஆய்வுகூடத்தில்  RaTG13 வைரசின் மரபனுவில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் சார்ஸ் கோவ் 2 வைரஸ்  உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இந்த சுருக்கமான பதிவை தனது ரெடிட் வலைதள பக்கத்தில் தி சீக்கர் வெளியிட்டதை தொடர்ந்து அந்தப் பதிவை ரெடிட் நிறுவனம் நீக்கியதுடன் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

ஒரு பதிவுக்காக தனது கணக்கு எதற்காக முடக்கப்பட்டது என்ற கேள்வி பெரிதாக எழுந்ததை தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஒத்த கருத்துடைய பலதரப்பட்ட அறிமுகமில்லாத நபர்களுடன் விவாதிக்க தொடங்கினார்.

இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களுக்கு அந்த விவாதங்கள் மூலமாக விடை கிடைத்ததாக தி சீக்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் RaTG13 வைரஸ் குறித்து ஆய்வு செய்வதன் மூலம் இந்த கேள்விகளுக்கான விடை கிடைக்கக்கூடும் என்று அனைவரும் நம்பினர்.

டிராஸ்டிக் குழுவினர் இதுதொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டத்தொடங்கினர். பல ஆண்டுகளுக்கு முன் ஷி ஜெங்க்லீ எழுதிய ஒரு கட்டுரையில் RaTG13 வைரஸ் குறித்து ஒரு சிறிய குறிப்பை வெளியிட்டிருந்தார்.

ஷி ஜெங்க்லீ எழுதிய இவ்விரு ஆய்வு கட்டுரைகளையும்  ஆராய்ந்த இந்த குழு RaTG13 வைரஸ் யுனான் மாகாணத்தின்  மொஜியாங் பிராந்தியத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்தினர்.

2012 ம் ஆண்டு இங்கு 6 பேருக்கு வௌவால் மூலம் ஏற்பட்ட தொற்று மூலம் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு 3 பேர் இறந்து போனார்கள். இதுவே சார்ஸ் கோவ் 2, RaTG13 அல்லது வேறு வைரஸ் மூலமாக மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயின் ஆரம்பமாக இருந்திருக்க வேண்டும்.

மொஜியாங் பிராந்தியத்தில் உள்ள சுரங்கத்தில் வேலை செய்பவர்களில் சிலர் இறந்து போனதை சயின்டிஃபிக் அமெரிக்கன் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷி ஜெங்க்லீ பூஞ்சை நோய் காரணமாக இந்த மரணம் நேர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார், அதில் RATG13 வைரஸ் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

பூஞ்சை காரணமாக மரணம் சம்பவிக்கவில்லை சார்ஸ் போன்ற வைரஸ் மூலமாகத்தான் மரணம் நேர்ந்திருக்கிறது என்பதில் உறுதியாக இருந்த டிராஸ்டிக் குழவினர், ஏதோ ஒருவிதத்தில் மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை வுகான் ஆய்வு மையம் மறைக்க வேண்டிய அவசியம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

ஆதாரங்களை திரட்ட நினைத்த தி சீக்கர் தனது ஆய்வின் நோக்கத்தை குழுவில் உள்ள மேலும் பலருக்கு தெரியப்படுத்தினார் இதன் விளைவாக சீன ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதழ்கள் அடங்கிய மிகப்பெரிய தரவு தளத்தின் தகவல் கிடைத்தது.

பெரும்பாலும் சீன மொழியில் இருந்த தகவல்களை கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் இரவு பகலாக ஆய்வு செய்து உருப்படியான தகவல் ஏதும் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தார்.

“புதிய வைரஸ் மூலம் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்ட 6 நோயாளிகளின் புள்ளிவிவரம்” என்ற தலைப்பில் கன்மிங் மருத்துவ  பல்கலை மாணவர் ஒருவர் 2013 ம் ஆண்டு எழுதியிருந்த 60 பக்க ஆய்வு கட்டுரை ஓன்று அந்த தரவு தளத்தின் மூலம் சிக்கியது.

நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவர்கள் நிலை குறித்து படிப்படியாக விளக்கமாக அதில் குறிப்பிட்டுள்ள அந்த மாணவர் இந்த காய்ச்சல் சீனாவில் உள்ள ஒருவகை வௌவாலில் இருந்து உருவான சார்ஸ் வகை வைரசால் ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து எந்த  வித அனுபவமோ உள்கட்டமைப்போ இல்லாத எங்களால் இத்தனை விவரங்களை சேகரிக்க முடிந்தபோது முன்னணி புலணாய்வு பத்திரிகைகளால் ஏன் இதை செய்ய முடியவில்லை ? என்ற கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று தி சீக்கர் குறிப்பிட்டுள்ளார்.

மொஜியாங் சுரங்கம் குறித்த விவரங்களை டிராஸ்டிக் குழு வெளிப்படுத்திய சில நாட்களில், 2020 ம் ஆண்டின் இறுதியில், பிபிசி உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய அந்த சுரங்கம் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல முற்பட்டனர்.

அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை மிகவும் ஆபத்தான இடம் வனவிலங்குகள் உலவும் இடம் என்றெல்லாம் கூறி பத்திரிக்கை துறையைச் சார்ந்த யாரும் அங்கு சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

இதனிடையே அங்கு செல்ல முயன்ற பிபிசி செய்தியாளர் ஜான் சுட்வொர்த் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தடைகளை மீறி மற்றவர் கண்ணில் மண்ணை தூவி அந்த சுரங்க வாயில் வரை சென்ற வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தியாளரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். இந்த சுரங்கத்தின் மர்மம் இன்னும் நீடித்தது.

சுரங்க விவகாரம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியான பிறகு டிராஸ்டிக் குழுவின் செயல்பாடுகள் குறித்து கேள்விப்பட்ட பல ஆர்வலர்கள் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

வைரஸ் மரபணு ஆய்வுக்கூடங்கள் பின்பற்ற வேண்டிய ஆய்வக பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்த இவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய துணை குழுக்களை அமைத்து செயல்பட்டனர்.

ஆய்வுக்கூடத்தின் பங்கு இருப்பதை அவர்களின் ஆய்வு தெளிவுபடுத்தியது.

தி சீக்கருடன் கைகோர்த்த மாட்ரிட்டைச் சேர்ந்த தரவு விஞ்ஞானி ரிபேரா இதற்கான ஒரு முக்கிய ஆதாரத்தை வெளிப்படுத்தினார்.

RaTG13 வைரஸ் குறித்து வுகான் ஆய்வு கூடம் கடந்த ஏழாண்டுகளில் ஏதாவது ஆய்வு நடத்தியதா ? என்ற கேள்விக்கு இல்லை என்று பீட்டர் டஸ்சாக் பதிலளித்திருந்தார்.

சார்ஸ் வைரஸ் வகையை சேராததால் அதுகுறிதது ஆய்வுக்கூடம் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை, இது அதிக ஆபத்து இல்லாதது ஆனால் சுவாரசியமான ஒன்றாக இருந்ததால் அதை அப்படியே சேமிப்பு பெட்டகத்தில் வைத்து விட்டோம் என்று அவர் கூறியது வினோதமாக இருப்பதாக ரிபெரா தனது புலணாய்வில் தெரிவித்தார்.

இந்த கூற்றை ரிபெரா ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு புதிய ஆய்வு கட்டுரை எழுதுபவர்கள் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்ட வைரசின் மரபணு குறித்த விவரங்களை வெளியிடவேண்டியது அவசியம்.

அப்படி வுகான் ஆய்வகம் வெளியிட்ட ஒர் அறிக்கையில் அவர்களை அறியாமல் RaTG13 மரபணு குறித்த பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

அவர்கள் கூறியது போல் ஆய்வகத்தில் வெறுமனே சேமிப்பு பெட்டகத்தில் வைக்காமல் 2017 மற்றும் 18 ம் ஆண்டில் இந்த வைரஸ் குறித்த ஆய்வை தீவிரமாக நடத்தியதை ரிபெரா ஆதாரத்துடன் கண்டுபிடித்திருக்கிறார்.

மொஜியாங் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரஸ் குறித்து தீவிர ஆராய்ச்சியில் கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டுள்ளனர், அதற்காக பல முறை இந்த சுரங்கத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான மாதிரிகளை சேமித்து RaTG13 தவிர அங்கு கிடைத்த வேறு வகை வைரஸ் குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.

2012 மற்றும் 13 ம் ஆண்டுகளில் சிலர் மரணமடைய காரணமான வைரஸ் குறித்து விரிவாக ஆய்வு நடத்த அப்போது அவர்களிடம் போதிய வசதிகள் இல்லாததால் வசதி வாய்ப்புகள் பெருக பெருக பலமுறை அங்கு சென்று வந்திருக்க வேண்டும் என்பது ரிபெராவின் யூகம்.

தாங்கள் கேட்ட தரவுகளை தர வுகான் ஆய்வகம் மறுத்ததன் காரணமாக தனது புலணாய்வை தீவிரப்படுத்திய ரிபெரா 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான ஒரு டிவிட்டர் பதிவில் சுரங்கத்தில் கிடைத்தது ஒரு வைரஸ் அல்ல ஒன்பது வைரஸ் என்பதை உறுதிப்படுத்தினார்.

வைரஸ் குறித்த விவரங்கள் அடங்கிய தரவுதளம் ஒன்றை வுகான் ஆய்வகம் நிர்வகிக்கிறது, அதில் சிறிது காலமாக எந்த தரவும் இல்லாமல் காலியாக உள்ளது.

இதுகுறித்து ஷி ஜெங்க்லீயிடம் கேட்டபோது கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து தரவு தளத்தின் மீது தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால் 2021 ஜனவரி முதல் அதை முடக்கி வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

ஆனால் டிராஸ்டிக் குழு நடத்திய ஆய்வில் இந்த தரவு தளம் கொரோனா பரவலுக்கு சில மாதங்கள் முன் செப்டம்பர் 2019 முதல் முடக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வுகள் மற்றும் ஆய்வுக்கான விருதுகளின் விவரம் அடங்கிய தரவுகளில் சார்ஸ் வைரஸ் குறித்து எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

டிராஸ்டிக் குழு சேகரித்த இந்த விவரங்கள் அனைத்தும்  வுகான் ஆய்வகம் கடந்த பல ஆண்டுகளாக ஆபத்தான கொரோனா வைரஸை சேகரித்து வந்துள்ளது, அதில் பல விவரங்களை வெளிஉலகிற்கு அறிவிக்கவில்லை.

இந்த வகை வைரஸ்கள் மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது எப்படியெல்லாம் உறுமாறுகிறது என்ற ஆய்வை தீவிரமாக நடத்தியுள்ளனர்.

ஆய்வின் மூலம் இதற்கான மருந்தை கண்டுபிடிப்பது என்பதே அதன் ஒற்றை நோக்கமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் தற்போது அதனால் ஏற்பட்ட விபரீதத்தை மறைக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

இந்த விவரங்கள் அனைத்தையும் வலைதளபக்கம் ஒன்றை தொடங்கி இந்த தரவுகள் அனைத்தையும் அதில் பதிவேற்றியுள்ளனர் டிராஸ்டிக் அமைப்பினர்.

டிராஸ்டிக் அமைப்பின் இந்த புலணாய்வுக்குப் பின் இதற்கு ஒப்புதல் அளிப்பது போல் பல்வேறு தரவுகளை வுகான் ஆய்வகம் புதுப்பித்துள்ளது.

மேலும் பல்வேறு பத்திரிகைகள், விஞாஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இவர்களின் பணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த அறிக்ககைகள் குறித்த விவாதம் ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மே 26 ம் தேதி இதுகுறித்து அமெரிக்க புலணாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு 90 நாட்களில் இதற்கான விடை காண வேண்டும்  என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பையும் சீனாவின் ஒத்துழைப்பும் வேண்டும் என்று பைடன் கேட்டு்க்கொண்டுள்ளார்.

இதற்கு சீனா செவிசாய்க்குமா என்பது கேள்விகுறியென்ற போதும். கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதற்கான அதிகாரப்பூர்வ பதில் விரைவில் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : தி நியூஸ் வீக்