மகா. அரசியலை ‘மெகா’ தலைப்பிட்டு, பரபரப்பூட்டிய நாளிதழ்கள்! முழு விவரம் இதோ!

Must read

மும்பை: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து, செய்தித்தாள்களில் வெளிவந்த தலைப்புச் செய்திகளுக்கும், நடந்த நிகழ்வுகளுக்கும் இமாலய மாற்றம் காணப்பட்டது. முக்கிய நாளிதழ்களில் இடம்பெற்ற விவரங்களை பார்ப்போம்.

சனிக்கிழமை காலை பொழுது வழக்கம் போல புலர்ந்து கொண்டிருந்த சமயம். அனைவரின் கைகளில் இருந்த செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளுக்கும், தொலைக்காட்சி செய்திகளுக்கும் சற்றும் சம்பந்தமே இல்லை என்று குழம்பித்தான் போயினர் பொதுமக்கள்.

முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என்று செய்தித்தாள்களில் தலைப்பு செய்திகள் காணப்பட, அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னவிஸ் என்று தொலைக் காட்சிகளில் பரபரப்பு செய்திகள் பளிச்சிட்டு கொண்டிருந்தன.

ஒட்டுமொத்த இந்தியாவும் பரபரத்துக் கொண்டிருந்த அத்தருணத்தில், ஞாயின்று பிரபல நாளிதழ்களில் அதன் தாக்கத்தில் வெளியான செய்திகளை பார்க்கலாம். தி டெலிகிராப் என்ற நாளிதழில் வீ தி இடியட்ஸ் (அதாவது நாம் முட்டாள்கள்) என்று தலைப்பிட்டு ஆவேசத்தை கொட்டி இருக்கிறது.

அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிர அரசியலில் என்ன நடந்தது? ஜனாதிபதி ஆட்சி எப்போது திரும்ப பெறப்பட்டது? என முழு விவரங்களை அள்ளி தெளித்திருக்கிறது தி டெலிகிராப் பத்திரிகை.

2 கட்டுரைகள் தீட்டப்பட்டுள்ளன. அதில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து எப்படி, ஆட்சியை பறித்துக் கொண்டது என்பது குறித்து விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் கதவுகளை சிவசேனா கூட்டணி தட்டியது, மொத்தமுள்ள 54 தேசியவாத எம்பிக்களில் 40 பேர் எப்படி அஜித் பவாருடன் சென்றது எப்படி என கட்டுரை தீட்டியிருக்கிறது.

பாஜக அரசியலை டெலிகிராப் துகிலுரிக்க, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழோ, இந்திய, வங்கதேச டெஸ்ட் போட்டியுடன் மகாராஷ்டிரா களத்தை பிணைத்து செய்தி வெளியிட்டு இருக்கிறது. பிங்க் பந்து என்பதால் அது வருவது யார் கண்ணுக்கும் தெரியாது என்று கிரிக்கெட்டும், அரசியலை ஒப்பிட்டு எழுதி இருக்கிறது. அஜித் பவாரின் இந்த கொல்லைப்புற அரசியல் எப்படி நடந்தது என்றும் விரிவாக வெளியிட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழோ, நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரம் என்று தலைப்பிட்டு செய்தியை பதிவு செய்திருக்கிறது. அன்றைய இரவு என்ன நடந்தது? உலகம் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் மகாராஷ்டிர அரசியல் நிலைமை எந்த திசையை நோக்கி சென்றது என்று செய்தி வெளியிட்டு உள்ளது.

அஜித் பவாரின் பதவியேற்பு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் பதவி பறிப்பு, சிவசேனா, என்சிபி, காங். கூட்டணி உச்சநீதிமன்றம் போனது என்று வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில், மகாராஷ்டிரா அரசியல் நாடகம் தொடர்கிறது, பட்னவிஸ் முதல்வர், அஜித் துணை முதல்வர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அதே முதல் பக்கத்தில் பல துணை தலைப்புகளும் இட்டு, செய்தியை விளக்கமாக வெளியிட்டு இருக்கிறது. பவார் குடும்பத்தில் பிளவு, அஜித் பவார் அரசியல் என தொகுப்பாக்கி தந்திருக்கிறது.

தி ஆசியன் ஏஜ் என்ற பத்திரிகையில், நள்ளிரவு அதிரடி, பாஜகவின அரசியல் என்று மகாராஷ்டிர அரசியல் களத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு, 1978ம் ஆண்டு சரத் பவார் எப்படி முதலமைச்சர் ஆனார் என்று கடந்த கால அரசியல்களையும் நினைவூட்டி இருக்கிறது.

 

More articles

Latest article