சென்னை: பாஜகவுக்கு காவடி தூக்கும் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்துத் துறைகளின் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து சூப்பர் சீஃப் மினிஸ்டர் ஆக முயற்சிக்க வேண்டாம் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு: மீன்வளத்துறை மற்றும் பணியாளர் துறை பற்றியே இன்னும் முழுமையாகத் தெரிந்திராத அமைச்சர்  ஜெயக்குமார் தன்னை ஏதோ ஆக்டிங் சீஃப் மினிஸ்டர் போல் நினைத்துக் கொண்டு, அனைத்துத் துறைகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வது, அதிகப்பிரசங்கித்தனம் என்பதை விட, அவசரமாக அரிதாரம் பூசிய மோகத்தில் போடும் போலி நாடகம்.

நாகரீகமான பேச்சுக்கும், நயமான வார்த்தைகளுக்கும், ஆக்கப்பூர்வமான எதிர்த்கட்சித் தலைவர் பணிகளுக்கும், நாட்டுக்கே இலக்கணமாகத் திகழும் ஸ்டாலினை பார்த்து, தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார்.  அமைச்சர் ஜெயக்குமார் பச்சைப் பொய் கூறுவது, அதிமுக அரசின் வெற்று அறிவிப்புகளிலும், வெட்டியான விளம்பரங்களிலும், விதண்டாவாத அறிக்கைகள், பேட்டிகளிலும் உள்ள பொய்யும் புரட்டும் போலவே இருக்கிறது.

நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்திற்குள் நுழைந்தது என்பதை  இன்றுவரை மறுக்க இயலவில்லை. உதய் திட்டம், ஜி.எஸ்.டி. சட்டம், முத்தலாக் போன்ற பல்வேறு, மாநில உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து விட்டு, பிறகு ஆதரித்த இரட்டை வேடத்திற்கு இதுவரை பதில் இல்லை.

காவிரியில் ஏன் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியவில்லை, மேகதாது அணை,தென் பெண்ணையாற்றில் அணை போன்றவை கட்டுவதை ஏன் தடுக்க முடியவில்லை, உள்ளாட்சித் தேர்தலில் ‘நேரடி’ ‘மறைமுகம்’ என்று முன்னுக்குப்பின் முரணாகச் சட்டம் கொண்டு வந்து தள்ளாடுவது ஏன், OBC மாணவர்களுக்கு பொதுத் தொகுப்பில் கிடைக்க வேண்டிய 5530 மருத்துவ இடங்களை ஏன் பெற முடியவில்லை – இவை எதற்கும் முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆனால் இவற்றுக்கு எல்லாம் தனக்கு மட்டுமே பதில் தெரியும் என்பது போல், மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கி ஊழல் புகழ், அரசு ஊழியர்களை அலைக்கழித்து- அசிங்கமாக, தரக்குறைவாக பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்த புகழ் ஆகியவற்றிற்குச் சொந்தமான ஜெயக்குமார் பேசுவது வெட்கக்கேடானது.

காவிரி நடுவர் மன்றம் அமைத்ததில் இருந்து இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்தும் வரை போராடி வெற்றி பெற்றதும், முல்லைப் பெரியாறு பிரச்சினையில்   உச்சநீதிமன்றம் மூலம் உரிமையை மீட்டதும் திமுக தான் என்ற அரிச்சுவடி கூட ஜெயக்குமாருக்குத் தெரியவில்லை.

சசிகலாவுக்கு சல்யூட் அடித்து தலை குனிந்து நின்று அமைச்சர் பதவி பெற்று, தன் மகனுக்கும் எம்.பி. பதவி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார், மக்களாட்சி பற்றிப் பேசுவது, அதிகாரத்தில் இருப்பதால் வரும் ஆணவப் பேச்சே’ தவிர  அர்த்தமுள்ள பேச்சு அல்ல.

தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் தாரை வார்த்து விட்டு பாஜகவிற்கும், அக்கட்சியின் கொள்கைகளுக்கும் கைகட்டி, காவடி தூக்கும் ஜெயக்குமார் போன்றவர்கள் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அவ்வப்போது போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் முதலில் கவலைப்படட்டும்.

வீணாக அனைத்துத் துறைகளின் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து, எங்கள் கழகத் தலைவர் ஒரு முறை குறிப்பிட்டது போல் சூப்பர் சீஃப் மினிஸ்டர் ஆக முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.