சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சி.ஏ.ஏ. சட்டம் மூலம் பாஜக சாதிக்க நினைப்பது என்ன என்ற கேள்வி இந்திய மக்களிடையே எழுந்துள்ளது.

2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்து, சீக்கியர், ஜெயின், கிறிஸ்தவர், பௌத்தர்கள் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குடியுரிமை பெற தங்களது நாட்டில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிஏஏ சட்டமுன்வடிவம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் (ஜேபிசி) ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வின் போது, புலனாய்வு அமைப்பு (IB) உட்பட பல நிறுவனங்களிடமிருந்து ஆதாரங்களையும் அறிக்கைகளையும் JPC பெற்றது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு IB அப்போது வழங்கிய அறிக்கையில் 2014 டிசம்பர் 31 முடிய இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களின் என்ணிக்கை 31,313 பேர் மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

அதில் இந்துக்கள் 25447 சீக்கியர்கள் 5807 கிறிஸ்தவர்கள் 55 பௌத்தர்கள் 2 மற்றும் பார்சி 2 என்று குறிப்பிட்டுள்ளது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் வெறும் 31,313 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான இந்த சட்டத்தை எதிர்க்க காரணம் என்ன ?

சிஏஏவின் உண்மையான செயல்திட்டம் குடியுரிமைப் பதிவேட்டை தொடர்ந்து செயல்படுத்துவதுவதன் மூலம் சிறுபான்மையினரின் குடியுரிமையைப் பறிப்பதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக கள்ள மௌனம் சாதித்து வருவதாகவும் 31,313 பேர் மட்டுமே பயன்பெறப் போகும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பின்னணி குறித்து பாஜக தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.