சென்னை,

மிழகத்தில் 11,555 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக அரசும், சுகாதாரத்துறையும் டெங்கு கொசுவை அழிக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பிலிருந்து மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில், பள்ளி மாணவர்களும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மேலும் 2000 செவிலியர்கள் நியமிக்க இருப்பதாக தமிழக முதல்வர் கூறி உள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசியல் கட்சியினர் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு சரியான முடுறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று வைகோ குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து அறிக்கை தரும்படி மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

அதன்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளது. அதில், தமிழகத்தில் 11 ஆயிரத்து 555 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளது.

தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்து இருப்பது தமிழக அரசின் தகவலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.