சென்ற தொடரில் எப்படி செயற்கைக்கோள் மிகச்சரியாக பூமியை சுற்றிவருகிறது என்று பார்த்தோம். இந்த வாரம் செயற்கைக்கோள்கள் எத்தனை டிகிரி வித்தியாசத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, விண்வெளியில் நிலைநிறுத்த வாடகையும் கொடுக்கிறார்கள் ஏன் என்று பார்ப்போம்

நிலநடுக்கோட்டில் (0 டிகிரி அட்சரேகை) மட்டுமே இந்தச் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்த முடியும். ஏனெனில் புவியின் அச்சிலேயே இந்தச் செயற்கைக் கோள்களும் சுழல வேண்டுமல்லவா? எனவே தீர்க்க ரேகையின் அளவில் மட்டுமே இச்செயற்கைக் கோள்களின் இடங்களைக் குறிப்பிடுவார்கள். இதனால் நிலநடுக்கோட்டிலிருக்கும் நாடுகளுக்கு அடித்தது ஆச்சரிய அதிர்ஷ்டப்பரிசு! இந்தியாவுக்கும் தான்! புவியிலிருக்கும் இடத்தை மட்டுமல்லாது, புவிக்கு மேல் 35786 கி.மீ. உயரத்திலிருக்கும் இடத்தையும் சேர்த்து உரிமை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்! ஆம்! துரதிருஷ்டவசமாக (!) நிலநடுக்கோட்டிலில்லாமல் விலகியிருக்கும் அனைத்து நாடுகளும், நிலநடுக்கோட்டின் மேலிருக்கும் நாடுகளுக்குத் தங்கள் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்த வாடகை கொடுக்கின்றன. இவ்வாறு அனுப்பப்படுவது தான் இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் இன்சாட் வகை செயற்கைக் கோள்களாகும்.

நிலவு மற்றும் சூரியக்காந்த வீச்சு காரணமாகச் சில சமயங்களில் இந்தச் செயற்கைக் கோள்களின் பாதை மாற வாய்ப்பிருக்கின்றது. அச்சமயத்தில் தமது பூஸ்டர்களை உபயோகித்து மீண்டும் பாதைக்குத் திருப்பி விடப்படுகின்றன இந்தச் செயற்கைக் கோள்கள். நம் இணையம், அலைபேசி இயக்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இயங்க‌ இந்த நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக் கோள்களும் ஒரு காரணம் என்பது அதிசயம் தானே? நமது டிஷ் ஆண்டெனாவை ஏன் ஒரே திசையை நோக்கி வைக்கச் சொல்கின்றார்கள் என்று இப்போது புரிகின்றதா?!

இவ்வளவு உயரத்திலிருப்பதால் தகவல் செயற்கைக் கோளுக்குச் சென்று மீள்வதற்கு 253 மில்லி விநாடிகள் ஆகின்றனவாம். எனவே தான் நாம் பேசுவது உடனே கேட்கவில்லையாம்!

சனி கிரகத்துக்கு வளையங்கள் இருப்பது போல, புவியைச் சுற்றிலும் செயற்கையாக மனிதர்கள் செயற்கைக் கோள் வளையத்தை உருவாக்கி விட்டனர்! இதுவரை எத்தனை செயற்கைக் கோள்கள் இருக்கின்றன என்று பட்டியலைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது! இவற்றில் சில செயற்கைக் கோள்கள் வெறும் 0.1 டிகிரி வித்தியாசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஆயினும் புவியின் தீர்க்கரேகையில் ஒரு டிகிரி என்பது அவ்வளவு உயரத்தில் 754 கி.மீ. தூரமாகும். ஆகவே, இவ்விரண்டு செயற்கைக் கோள்களுக்கிடையே 75.4 கி.மீ. தூரம் இடைவெளி இருக்கின்றது என்று கொள்ளலாம்.

எனவே இன்னும் நிறைய செயற்கைக் கோள்களை அனுப்ப இடமிருக்கின்றது. 🙂

 

இரத்தினகிரி சுப்பையா