கொரோனா வைரசின் புதிய உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் வகை தொற்று இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
டெல்டா வகை உருமாற்ற கொரோனாவை விட லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும் தொற்று அதிகரித்து வரும் வேகம் மூன்றாம் அலை குறித்த பீதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதே இந்த அபாயத்தைக் குறைக்க சிறந்த தீர்வு என்று சொல்லப்படுகிறது.
முந்தைய திரிபுகளில் கண்ட அதே அறிகுறிகளையே ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளானவர்களும் அனுபவிக்கிறார்கள்.
ஒமைக்ரானின் முதல் சில அறிகுறிகள் லேசான காய்ச்சல், சோர்வு, தொண்டை அரிப்பு மற்றும் உடல் வலி.
வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகிய அறிகுறிகள் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களிடம் அதிகம் தென்படவில்லை.
ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஐந்து அல்லது ஆறு நாட்கள் கழித்தே அதன் அறிகுறியை வெளிப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் அது 14 நாட்கள் கூட ஆகிறது என்று கூறப்படுகிறது.
அறிகுறி தோன்றுவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்து அடுத்த 10 நாட்களுக்கு மற்றவர்களுக்கு பரவ தொடங்குகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் நிலையில், ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் விழிப்புடன் செயல்பட இருக்கப்பதோடு கட்டுப்பாடுகளை மீறாமல் செயல்பட வேண்டும்.
ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவரை முறையான மருத்துவ சிகிச்சையுடன் இரண்டு வாரங்கள் தனிமையில் இருக்க செய்வது அவசியம்.