சென்னை மாநகராட்சி சார்பில் அடையார் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் ‘சென்னை தினம்’ இன்றும் நாளையும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சென்னப்ப நாயகரின் வாரிசுகளான தாமல் வெங்கடப்பா மற்றும் தாமல் அய்யப்ப நாயகர்களிடம் இருந்து 1639 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் தேதி கிழக்கு இந்திய கம்பெனி வாங்கிய ஒரு சிறு நிலப்பகுதியில் சென்னப்ப நாயகரின் பெயரிலேயே ஒரு குடியிருப்பு வளாகத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.

இந்த தினத்தை ‘சென்னை தினம்’ என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலப்படுத்தி வருவதுடன், இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் விழாவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை என்ற பெயருக்கு வேண்டுமானால் 383 ஆக இருக்கலாம் ஆனால் சென்னை மண் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்று ஒரு சிலர் சென்னை தினத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இயேசு கிறிஸ்துவின் நேரடி சீடரில் ஒருவரான புனித தோமையார் வந்து சென்ற நகரம் மட்டுமல்லாமல், அவரது கல்லறை சென்னை சாந்தோமில் இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்றளவும் உள்ளது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மயிலை கபாலீஸ்வரர் கோயிலும் உள்ள நிலையில் சென்னைக்கு வயது 383 என்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தவிர மயிலாப்பூரில் பிறந்ததாக கூறப்படும் திருவள்ளுவரின் பெயரால் திருவள்ளுவர் ஆண்டை கடைபிடித்து வரும் தமிழக அரசு சென்னை மாநகராட்சியின் இந்த சென்னை தின கொண்டாட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது என்றும் நமது மண்ணின் பாரம்பரியத்தை மறந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு குடைபிடிப்பது போல் உள்ளது என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.