இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரனை ஏமாற்றி பணம் பறித்த விவகாரம் மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஆகியோரின் சிக்கலை தீர்த்துவைப்பதாகக் கூறி பல நூறு கோடி ரூபாய் சுருட்டியவர் சுகேஷ் சந்திரசேகர்.

அனைத்து அரசியல் கட்சியினருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்த சுகேஷ் சந்திரசேகரை 2019 ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் தொடர்பாக 50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர்

திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் குவிய ஆரம்பித்தன. அதில், ரேன்பேக்ஸி நிறுவன அதிபரை சிறையில் இருந்து விடுவிக்க அவரது மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் பணம் பறித்ததாக வந்த புகாரை அடுத்து பெங்களூரைச் சேர்ந்த சுகேஷின் பின்னணி குறித்து துருவி துருவி விசாரிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது மோசடி பணத்தில் அவர் வாழந்த ஆடம்பர வாழ்க்கைக்கு சான்றாக பெராரிஸ், பென்ட்லீஸ், மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ., லேண்ட் ரோவர்ஸ் உள்பட 16 வகையான கார்கள் மட்டுமல்லாமல் 10.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் விலையுயர்ந்த லம்போர்கினி ஆகிய கார்களை வைத்திருந்தது தெரியவந்தது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் – சுகேஷ் சந்திரசேகர்

மேலும், பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபட்தேஹி ஆகியோருடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த சுகேஷ் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பரிசுப்பொருட்களையும் வாரி வழங்கியிருப்பது தெரியவந்தது.

52 லட்ச ரூபாய் மதிப்புள்ள குதிரை ஒன்றை ஜாக்குலினுக்கு பரிசளித்து வாய்பிளக்க வைத்தது மட்டுமல்லாமல், விலையுயர்ந்த பெர்சிய பூனையையும் பரிசளித்திருக்கிறார், இந்த வகை பாரசீக பூனைகள் ஒவ்வொன்றும் சுமார் 9 லட்ச ரூபாய் விலைமதிப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அதேபோல், நடிகை நோரா ஃபட்தேஹி-யின் மனதைக் கவர ஐபோன் மற்றும் BMW கார் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லீனா மரியா பால்

ஏற்கனவே அமலாக்கத் துறையால் சுகேஷ் சந்திரசேகரின் ஏமாற்று வேலைகளுக்கு உதவியதாக நடிகை லீனா மரியா பால் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பரிசுப் பொருட்களை வாங்கிய நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா-வுக்கு 200 கோடி ரூபாய் பணம் பறித்ததில் உள்ள பங்கு குறித்து விசாரணை செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆகஸ்ட் மாதம் ஆஜரான ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் “சுகேஷ் சந்திரசேகர் மீதான வழக்கில் சாட்சியாகவே விசாரிக்கப்பட்டார்” என்று விளக்கமளித்து.

அதேபோல் அக்டோபர் மாதம் விசாரணைக்கு ஆஜரான மற்றொரு நடிகையான நோரா “தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கமளித்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதோடு சுகேஷ் மீதான வழக்கில் சாட்சியாகவும் மாறியுள்ளார்” என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

நோரா

இந்நிலையில், சென்னை, மும்பை, டெல்லி என்று விமானத்தில் பறப்பதற்கு விமான டிக்கெட்டுக்கு மட்டுமே 8 கோடி ரூபாய் வரை செலவழித்திருக்கும் சுகேஷ் தொடர்பான விசாரணையில் சம்பந்தப்பட்ட ஜாக்குலின் மற்றும் நோரா ஆகியோர் மீது சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்கவும் கைது செய்யவும் விமான நிலையங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் நேற்று ஜாக்குலினை பிடித்து விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருக்கிறார்கள்.

சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ஜாக்குலின் மீதான இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.